தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் தீபாவளி மற்றும் பொங்கல். இந்த இரு பண்டிகைகளையும் மொத்த தமிழ்நாடும் திருவிழா போல கொண்டாடுவார்கள்.

நாளை தீபாவளி:

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் களைகட்டி காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

விடாமல் பெய்யும் மழை:

தீபாவளி பண்டிகை நெருங்க, நெருங்க மழையின் தாக்கமும் தமிழ்நாட்டில் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், முரசு புயல் காரணமாக கடந்த வாரம் முதல் மழை பெய்து வந்தது. நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துச் சென்று வரும் சூழலில், காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தீபாவளி பண்டிகையான நாளையும் மழையின் தாக்கம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாசு வெடிக்க முடியாமல் அவதி:

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள் இல்லாமல் முடிவடையாது. ஆனால், மழை விட்டு விட்டுப் பெய்து வருவதால் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் திங்கள்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு வெடித்து கொண்டாடலாம் என்று ஆவலுடன் இருந்த மாணவர்கள் பலரும் மழையால் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பல இடங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெளியூர் செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பதால் வழக்கமான போக்குவரத்து நெரிசலைக் காட்டிலும் கூடுதல் நெரிசல் உருவாகியுள்ளது. மேலும், தீபாவளி நாளை என்பதால் இன்று பட்டாசு கடைகளிலும், புத்தாடை கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதும்.

பாதிக்கப்படுமா வியாபாரம்?

ஆனால், மழை அச்சுறுத்தி வருவதால் தீபாவளிக்கு முந்தைய நாளான இன்றைய வியாபாரம் பாதிக்கப்படுமோ? என்று வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக, பட்டாசு வியாபாரிகள் இன்று பெரியளவில் வர்த்தகம் செய்தால் மட்டுமே அவர்கள் லாபம் ஈட்ட இயலும். இல்லாவிட்டால் அடுத்த தீீபாவளி வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால், அவர்கள் பெரியளவில் வேதனையுடன் உள்ளனர். தீபாவளி பண்டிகைய முன்னிட்டு மறுபக்கம் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனைக்காக குவிந்துள்ளது. மழை காரணமாக அதன் வர்த்தகமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Source: Read Full Article