தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் ஒன்று காவிரி விவகாரம். சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக விஸ்வரூப பிரச்சினையாகவே இந்த விவகாரம் உள்ளது.

டெல்லி செல்லும் விஜய்:

தவெக ஆட்சியிலும் காவிரி விவகாரத்தின் பிரச்சினை என்பது நீடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில், தமிழக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் விஜய் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்கவருமான சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்.

ராகுல், சோனியாவிடம் பேசுவாரா?

இந்த நிகழ்வின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் விஜய் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகிய இருவரிடமும் மேகதாது அணை விவகாரம் குறித்து விஜய் பேசுவார் என்றும் கருதப்படுகிறது. ஏனென்றால், காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது மற்றும் மேகதாது அணை கட்டுவது போன்ற விவகாரத்தில் எப்போதுமே தமிழ்நாட்டின் கருத்துக்கு முரணான கருத்தையே கர்நாடக அரசு முன்வைத்து வருகிறது.

டபுள்கேம் ஆடும் காங்கிரஸ்:

கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தவெக ஆட்சிக்கு உறுதுணையாக காங்கிரசே உள்ளது. ஒரு மாநிலத்தில் ஆளுங்கட்சி, மற்றொரு மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சியின் கூட்டணி கட்சி என்று இரு மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்தாலும் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் இரு மாநில காங்கிரஸ் தலைவர்களும் மாறி, மாறி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த கால திமுக ஆட்சியிலும் இந்த நிலைத் தொடர்ந்தது.

காவிரியில் தண்ணீர் பங்கீடு, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் இரு மாநிலங்களிலும் இரட்டை நிலைப்பாடுடன் இருப்பதை பலரும் காங்கிரஸ் டபுள் கேம் ஆடுவதாக விமர்சித்து வருகின்றனர். இது தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களாக இருப்பவர்களுக்கு எப்போதும் தலைவலியாகவே இருக்கிறது. இதனால், இந்த விவகாரம் தொடர்பாகவும் ராகுல் காந்தி மற்றும் சோனியாவிடம் விஜய் பேசுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மோடியுடன் சந்திப்பு:

காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தபோதும் தமிழக பாஜக, கர்நாடக பாஜக இடையேயான கருத்து இந்த விவகாரத்தில் முரண்பட்டே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லி செல்லும் விஜய் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பில் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமரிடம் விஜய் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.

Source: Read Full Article