திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த சந்திரபுரம் பகுதியில் நிலத்தகராறு காரணமாக பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்குள் புகுந்து கையை வெட்டி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்தனர்.

சந்திரபுரம் ஏரிக்கொடி பகுதியைச் சேர்ந்த காசி என்பவரின் மனைவி லட்சுமி (49). இவருக்குச் சொந்தமாக 25 சென்ட் நிலம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தின் அருகே கண்ணையா - சரோஜா தம்பதியினரின் பிள்ளைகளான மோகன், ருக்மணி, காமாட்சி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டின் முன்புறம் உள்ள நிலத்தை விற்றுவிடுமாறு மோகன் மற்றும் அவரது மனைவி சந்தியா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் நிலத்தை விற்க லட்சுமி மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, காவல் நிலையம் வரை புகார் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், மீண்டும் மோகன் குடும்பத்தினர் லட்சுமிக்குச் சொந்தமான நிலத்தில் தங்களது வீட்டின் கழிவுநீரை வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து லட்சுமி தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து தாக்கியதுடன், அவரது கையை வெட்டியதாகவும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சூறையாடியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த லட்சுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து கந்திலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தை விற்க மறுத்த பெண் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article