பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.

சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது சபரிமலையில் மண்டல கால வழிபாடு நாளை மறு நாள் 17-ல் தொடங்கி டிச.27 வரை நடைபெற உள்ளது. இதற்காக நாளை (திங்கள்) மாலை நடை திறக்கப்பட உள்ளது. இந்த 41 நாள் தொடர் வழிபாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால் பல்வேறு ஏற்பாடுகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இதன்படி இடுக்கி, பத்தினம்திட்டா மாவட்டத்தின் வழித்தடங்களில் உள்ள உணவகங்களில் 6 மொழிகளில் விலைப்பட்டியல் குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு ரூ. 2 லட்சத்துக்கான காப்பீடு வசதி உள்ளதால் தரிசன முன்பதிவின்போதே வாரிசுதாரர், அவர்களது உறவுமுறை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலைக்கான வனப்பாதை மண்டல, மகர விளக்கு வழிபாட்டுக் காலங்களில் மட்டுமே திறக்கப்படுவதால் இவற்றை தூய்மை செய்யும் பணி வெகுவாக முடிந்துள்ளன. அழுதகடவு நுழைவுப் பாதையில் காலை 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டு முக்குழியில் பிற்பகல் 2.30 மணிக்குள் செல்லவும், பின்பு அங்கிருந்து காலை 7 மணிக்கு கிளம்பி பம்பைக்கு பிற்பகல் 3 மணிக்குள் செல்லவும், சத்திரம் வனப்பாதையில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை செல்லவும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்நிதானம் அருகே உள்ள பெரிய நடைப்பந்தல் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பம்பை, சந்நிதானத்தில் 24 மணி நேர மருத்துவ சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனப்பாதையில் 22 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சிபிஆர் முதலுதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மண்டல கால வழிபாடு தொடங்குவதையொட்டி சந்நிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Source: Read Full Article