எது தமிழ்நாடு நாள் என்ற கேள்வியும், அது தொடர்பான விவாதங்களும் இன்றளவும் ஓய்ந்தபாடில்லை. தமிழ்நாடு நாளை கொண்டாடுவதில் இருக்கும் முரண்பாடு என்ன? ஆட்சிக்கு வந்த கட்சிகள் எதனை மேற்கோள் காட்டி தமிழ்நாடு நாளை அறிவித்தன என்பதை விரிவாக பார்க்கலாம்

நவம்பர்.1 ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என தமிழக அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. முதன்முதலில் 2019-ஆம் ஆண்டு அப்போதைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழக நிலப்பரப்பு அங்கீகரிக்கப்பட்ட நாளை தமிழ்நாடு நாள் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஸ்டாலினால், தமிழ்நாடு பெயர் மாற்றத்தீர்த்தானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை-18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுமென அறிவிக்கப்பட்டது.

இந்திய விடுதலையும், மொழிவாரி மாநிலங்களும்!

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது மெட்ராஸ், பம்பாய் உள்ளிட்ட 15 மாகாணங்களும் 560-க்கும் மேற்பட்ட சுதேசி மாகாணங்களும் இருந்தன. சுதேச மாகாணங்களின் இணைப்புக்கு பின்னர் இவை இந்திய மாகாணங்கள், சுதேசி மாகாணங்கள், ஆணையரின் கீழ் செயல்படும் சுதேச மாகாணங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என வகைபடுத்தப்பட்டன. இந்நிலையில் மிகப்பெரிய அளவிலும், பல்வேறு மொழிப்பேசும் மக்களையும் கொண்டிருந்த மாகாணங்களில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக வலுக்கத்தொடங்கின. மாகாணங்களை பிரிக்கும் முயற்சியில் இறங்கிய மத்திய அரசு, மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்க முடியுமா என தீர்மானிக்க எஸ்.கே.தார் கமிட்டியை அமைத்தது. இந்தக்கமிட்டி மொழிவாரி மாநிலங்கள் அமைக்க சாத்தியமில்லை என அளித்த அறிக்கைக்கு பல்வேறு பகுதிகளிலும் கண்டனங்கள் வலுத்தன. இதனையடுத்து இதே காரணத்திற்காக நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீத்தாராமையா ஆகியோரைக்கொண்டு அமைக்கப்பட்ட ஜே.வி.பி குழுவும் தார் கமிட்டியின் கருத்தையே பிரதிபலித்தது.

ஃபசல் அலி ஆணையம்

1952-ஆம் ஆண்டு பொட்டி ஸ்ரீராமுலு என்ற காந்தியவாதி மெட்ராஸ் மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களுக்கென தனிமாநிலம் வேண்டுமென வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். இது மொழிவாரி மாநிலங்களுக்கான உத்வேகத்தை தீவிரப்படுத்தியதோடு இதனையடுத்து நடைபெற்ற கலவரங்கள், துப்பாக்கிச்சூடுகளின் விளைவாக 1953 ஆம் ஆண்டு அக்.1 இல் ஆந்திர மாநிலம் உருவானது. இந்நிலையில் மொழி ரீதியில் மாநிலங்களை பிரிப்பது தவிர்க்க முடியாததென்பதை உணர்ந்த மத்திய அரசு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பசல் அலி தலைமையில் மாநில மறு சீரமைப்பு ஆணையத்தை அமைத்து மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தது.

மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு எனப்பெயர் மாற்றம்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும் தமிழக நிலப்பரப்பிற்கு பழைய ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தின் பெயரே நீடித்தது.இந்நிலையில் மெட்ராஸ் என்ற பெயரை தமிழ்நாடு எனப்பெயர் மாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த சங்கர லிங்கனார் 75 நாட்களுக்குப்பின் உயிரிழந்தார். இதனையடுத்து தமிழ்நாடு பெயர் மாற்றக்கோரிக்கை வலுப்பெற்றது. இதனையடுத்து 1967-இல் ஆட்சிக்கு வந்த அண்ணாதுரை ஜூலை 18-ஆம் தேதி ‘தமிழ்நாடு’ பெயா் மாற்ற தீா்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். அதைத் தொடா்ந்து 1968-ஆம் ஆண்டு இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 14.1.1969-இல் இம்மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என அதிகாரப்பூா்வமாகப் பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நாள் மற்றும் பெயர்மாற்றத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாட்கள் தமிழ்நாடு நாட்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போதைய அரசு இரு நாட்களையும் கொண்டாட முடிவு செய்திருந்தாலும் நவம்பர்.2-ஆம் தேதியையே பிரதான தமிழ்நாடு நாளாக அறிவித்துள்ளது.

Source: Read Full Article