"மது அருந்துவதில் முன் விரோதம்"

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மச்சிகாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமணி. இவரது எதிர்வீட்டில் 40 வயதுடைய ஆல்பிரட் ஆஸ்பின் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே மது அருந்துவதில் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் ஆல்பிரட் ஆஸ்பின், ஜெபமணியின் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மற்றும் ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியதுடன், தகராறிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

"தீக் காயங்களுடன் எரிந்த நிலையில் உடல்"

இதனை ஜெபமணி தட்டிக் கேட்ட போது, அவரைத் தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அச்சமடைந்த ஜெபமணி, சம்பவம் குறித்து புகார் அளிப்பதற்காக மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். புகார் அளித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிய போது , அவரது வீட்டிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அவரது 86 வயது தந்தை குழந்தைவேல் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

ஆல்பிரட் ஆஸ்பின், முதியவர் மீது துணிகளைப் போட்டு, அதன் மீது பாமாயிலை ஊற்றி தீ வைத்ததாக ஜெபமணி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெபமணி அளித்த தகவலின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு தீயில் கருகிய நிலையில் கிடந்த குழந்தைவேலின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, முதியவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் ஆல்பிரட் ஆஸ்பினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article