தவெக ஆட்சி அமைந்தது முதலே கடந்த கால திமுக ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்தவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை கையில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

1427 கோடி ரூபாய்:

அன்பில் மகேஷ் சிறையில் உள்ள நிலையில், கே.என். நேரு மீதான ஊழல் வழக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது துரைமுருகன் மீதான ஊழல் வழக்கு தீவிரம் அடைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இவர் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளியதில் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதற்காக தற்போது வரை 28 மணல் குவாரிகளில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஏச்சம்பாடி, கண்டனேரி, மாதவம்பெருமாள் கோயில் மற்றும் ஒருவந்தூரில் மட்டும் விசாரணை மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 1,427.34 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக துரைமுருகன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணல் அள்ளியதில் மோசடி:

ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதற்கு அரசு பல்வேறு விதிகளை வரையறுத்துள்ளது. அதன்படி, ஆற்றுப்படுகையை கண்டறிந்து, அதில் எவ்வளவு பரப்பளவில், எவ்வளது ஆழத்தில் மணல் அள்ளலாம்? என்ற திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் மதிப்பீடு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி மற்றும் மாவட்ட அளவிலான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேணடும். இதன்பின்னரே மணல் அள்ளும் பணிகள் தொடங்க வேண்டும்.

இவ்வாறு எடுக்கப்படும் மணல் அரசு முறைப்படுத்திய அமைப்பின் மூலமே விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக முன்பதிவு, பணம் செலுத்துதல் மற்றும் அனுமதி பெறுதல் போன்ற டிஜிட்டல் நடைமுறைகள் உள்ளது.

துரைமுருகன் மீது குற்றச்சாட்டு:

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விதிகள் அனைத்தும் மீறியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கும் இதில் பங்கு இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜுன் 13ம் தேதி இதுதொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக அமலாக்கத்துறைக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் தலைமைப் பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி முக்கியமான நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

திமுக-விற்கு பின்னடைவு:

திமுக முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மீது ரூபாய் 600 கோடி லஞ்சப்புகார், கே.என். நேரு மீது 634 கோடி லஞ்சப்புகார் ஏற்கனவே திமுக-விற்கு தலைவலியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ரூபாய் 1427 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய வழக்கில் சிக்கியிருப்பது பெரும் பின்னடைவை உருவாக்கியுள்ளது.

திமுக-வினர் அடுத்தடுத்து லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி வருவதால் அடுத்து என்ன செய்வது? என்று தீவிர ஆலோசனையில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Source: Read Full Article