Madurai Tanishq Jewellery Theft: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாகியுள்ள நிஷாந்தை தேடும் பணிகளை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.

நகைக் கடையில் கொள்ளை:

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையை, கடந்த 12ஆம் தேதி காலை வழக்கம்போல் திறந்த ஊழியர்களுக்கு பேரதிர்சி காத்திருந்தது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் சிதறிக் கிடந்ததுடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

டாட்டூவால் சிக்கிய கொள்ளையன்

பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு நவம்பர் 1ம் தேதி கையில் கட்டுப் போட்டபடியும், 2ம் தேதி தொப்பி அணிந்தபடியும் வாடிக்கையாளரைப் போல இயல்பாக நகைக்கடைக்குள் வந்த இளைஞரின் செயல்பாடுகள் சந்தேகிக்கும் வகையில் இருந்துள்ளன. இந்தக் காட்சிகளையும், 12ம் தேதி முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபரின் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இருவரது கைகளிலும் ஒரே மாதிரியான டாட்டூ இருப்பது தெரியவந்தது. இந்த டாட்டூவே கொள்ளையனை அடையாளம் காண்பதற்கான முக்கிய தடயமாக அமைந்தது. தொடர்ந்து நகைக்கடையை ஒட்டிய நேதாஜி மெயின் ரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, முகமூடி, ஹெல்மெட் மற்றும் கையுறை அணிந்தபடி இளைஞர் ஒருவர் பைக்கில் வேகமாகப் பேக்குடன் சென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

கடன் பிரச்னையில் காதலி..! உருகிய காதலன்

விசாரணையை தீவிரப்படுத்தியதில் அவரை பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய நிஷாந்த், அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கான வீடியோ எடிட்டிங் பணிகளையும் செய்து வந்துள்ளார். இதனிடையே தனது கல்லூரிக் காலத் தோழியும், பிரபல இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சருமான மீனாட்சியைக் காதலித்து வந்துள்ளார். அவர் புதிய வீடு கட்டி வரும் நிலையில், அதற்குப் போதிய பணம் இல்லாமலும், பல்வேறு கடன்கள் இருப்பதாகவும் கூறி காதலனிடம் கண்ணீர் விட்டு புலம்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?

இதனால் காதலியின் நிலையைப் பார்த்து கலங்கிய நிஷாந்த், நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கான திட்டத்தைத் தீட்டியுள்ளார். இந்தத் திட்டத்திற்கு மீனாட்சியும் உதவியதுடன், தனது பைக்கையும் கொள்ளைக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுத்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகைக் கடையில் கொள்ளையடித்தது எப்படி?

இதையடுத்து இருவரும் திட்டமிட்டபடி, கடந்த 5ம் தேதி நிஷாந்த் தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் வழியாகச் சென்று, லிப்ட் அருகே அமைக்கப்பட்டிருந்த அவசரகால வழியில் இருந்த இரும்பு வேலியை அகற்றிவிட்டு உள்ளே சென்று நோட்டமிட்டுள்ளார். தொடர்ந்து 12ம் தேதி நள்ளிரவு மீண்டும் இரும்புச் சாரம் வழியாக மூன்றாவது தளத்திற்குச் சென்றுள்ளார். அங்கு லிப்ட் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், லிப்ட் ஷட்டர் வழியாக உள்ளே சென்று அதனை உள்புறத்தில் இருந்து திறந்துள்ளார். பின்னர் மீண்டும் ஷட்டரைத் திறக்க முடியாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக அதன் நடுவில் கம்பியை வைத்துவிட்டு, ஒவ்வொரு தளமாக இறங்கிச் சென்று படிக்கட்டு வழியாகத் தரைத்தளத்தில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்துள்ளார்.

தொடர்ந்து கடைக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகளை எவ்வித பதற்றமும் இன்றி ஒவ்வொன்றாக எடுத்து ஒரு பேக்கில் பத்திரமாக வைத்துள்ளார். பின்னர் அந்தப் பேக்கைத் தோளில் மாட்டிக்கொண்டு, மீண்டும் லிப்ட் ஷட்டரில் வைத்திருந்த கம்பியை அகற்றிவிட்டு, அதே வழியாகக் கயிற்றின் உதவியுடன் ஒவ்வொரு தளமாகச் சென்று இரும்புச் சாரம் வழியாக வெளியேறியுள்ளார்.

காதலியின் பைக்கில் தப்பியோட்டம்:

முன்னதாக, நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடையின் பின்புறப் பகுதிக்கு வந்தபோது அங்கிருந்த நாய்கள் அவரைத் துரத்தியதால் முதற்கட்ட முயற்சியைக் கைவிட்டுள்ளார். பின்னர் அந்தப் பகுதியைச் சுற்றி வந்து பைக்கை நிறுத்திவிட்டு மீண்டும் மேலே சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையடிப்பதற்காக தனது காதலி கொடுத்த பைக்கைப் பயன்படுத்திய நிஷாந்த், கொள்ளையடித்த நகைகள் இருந்த பேக்குடன் நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் பதுக்கப்பட்ட நகைகள்:

அதிகாலை தனது தந்தை சுரேஷைத் தொடர்புகொண்டு தன்னிடம் ஒரு பேக் இருப்பதாகவும், அதனை வீட்டில் வைக்குமாறும் கூறியுள்ளார். சுரேஷ் அந்தப் பேக்கை வாங்கி வீட்டில் வைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த நிஷாந்த் மீண்டும் அந்தப் பேக்கை எடுத்துச் சென்று பல்வேறு பகுதிகளில் நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, மாடக்குளத்தில் உள்ள நிஷாந்தின் குடும்பத்திற்குச் சொந்தமான வயல்வெளிப் பகுதிக்கு ஆட்டோவில் சென்ற அவர், நகைக்கடைக்கு முன்பு வேவு பார்க்கச் சென்றபோது அணிந்திருந்த உடைகள் மற்றும் கொள்ளையின்போது பயன்படுத்திய உடைகள் உள்ளிட்டவற்றைத் தீயிட்டு எரித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் நகைகளைப் பதுக்கிவைத்துவிட்டு மீண்டும் ஆட்டோவில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

போலீசாரிடம் சிக்கிய காதலி..!

இதனிடையே, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட பைக் யாருடையது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது, திருப்பாலை பகுதியைச் சேர்ந்த நிஷாந்தின் காதலி மீனாட்சிக்குச் சொந்தமான பைக் என்பது தெரியவந்தது. இதையடுத்து மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, செல்போன் மூலமாகக் காதலி மீனாட்சியைத் தொடர்புகொண்டு பேச முயன்றபோது, நகைகளைப் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. தலைமறைவாகியுள்ள நிஷாந்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

யார் இந்த மீனாட்சி?

நிஷாந்தின் காதலி மீனாட்சி பட்டப்படிப்பு முடித்தவர். செல்போன் மற்றும் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் கொண்ட அவர், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு Techboss என்ற யூடியூப் தளத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் ஊதியப் பிரச்னை காரணமாக அங்கிருந்து வெளியேறி, வேறொரு யூடியூப் தளத்தில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து தற்போது தனியாக இன்ஸ்டாகிராமில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். புதியதாக வீடு கட்டுவது தொடர்பாகவும் வீடியோ வெளியிட்டுள்ள மீனாட்சி, வீட்டைக் கட்டி முடிப்பதற்குப் போதிய பணம் இல்லை எனப் புலம்பும் வகையிலான வீடியோவையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article