"இரு சக்கர வாகன பிரச்சனை"

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் ( வயது 46 ) இவர் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் 19 வயதுடைய முத்துவேல் , அருப்புக்கோட்டையில் உள்ள சௌடாம்பிகா கல்லூரியில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

இந்நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்பு முத்துவேல் வீரசோழன் அருகே உள்ள புலவர் வேலங்குடி பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், தவமுருகன் ஆகியோருடன் யார் முந்தி செல்வது என்ற தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

"14 பேர் கொண்ட கும்பல் - அரிவாள் வெட்டு"

இந்த நிலையில் , சம்பவத்தன்று முத்துவேல் தனது நண்பர்களுடன் வீரசோழன் பெரிய பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென 6 மோட்டார் சைக்கிள்களில் வந்த 14 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே முத்துவேலுடன் தகராறில் ஈடுபட்டிருந்த அஜித்குமார், தவமுருகன் ஆகியோர் அவரை அடையாளம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து முத்துவேலைச் சுற்றி வளைத்த அந்தக் கும்பல் , தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் முத்துவேலின் தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், படுகாயமடைந்த முத்துவேலை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முத்துவேலின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில், வீரசோழன் போலீசார் அஜித்குமார், தவமுருகன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவானவர்களைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கல்லூரி மாணவர் மீது அரிவாள் வீச்சில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா கே.நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் நாகராஜ் ( வயது 22) என்பவரை வீரசோழன் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Source: Read Full Article