முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்று திருச்செந்தூர். உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகனை தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக, முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான சூரசம்ஹாரத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிவார்கள்.

திருச்செந்தூர் பக்தர்கள் விடுதி:

திருச்செந்தூரில் நடப்பாண்டிற்கான சூரசம்ஹாரம் நவம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூரசம்ஹார நிகழ்வைக் காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். பக்தர்களின் வசதிக்காக கடந்த திமுக ஆட்சியில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. 150 அறைகள் கொண்ட இந்த விடுதி பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டது.

அதிகாரிகள் ஆக்கிரமிப்பா?

ஆனால், சூரசம்ஹாரத்தைக் காண்பதற்கு வரும் பக்தர்களுக்கு இந்த விடுதியில் இடம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. சூரசம்ஹார நிகழ்வைக் காண்பதற்கு பக்தர்கள் மட்டுமின்றி முக்கிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் உள்பட பலரும் வருவது வழக்கம். அவ்வாறு வரும் அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பலரும் அரசின் பக்தர்கள் தங்கும் விடுதியில் பெருமளவு ஆக்கிரமித்துவிடுவதால் பக்தர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், தவெக ஆட்சியிலும் இந்த நிலை நீடிப்பதாக அதிகாரிகள் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஆறுமுகம் விடுதி, குமரவிடங்கன் விடுதி, விசாகன் விடுதியில் உள்ள அறைகளை முன்பதிவு செய்ய முடியாத நிலை உருவாகியிருப்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

முற்றுப்புள்ளி வைப்பாரா அமைச்சர்?

அதிகாரமிக்கவர்களும், செல்வாக்குமிக்கவர்களுக்குமே இதுபோன்ற விஷேச காலங்களில் பக்தர்கள் தங்கும் விடுதியை ஆக்கிரமிப்பதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் உடனடியாக தலையிட்டு பக்தர்கள் சிரமமில்லாமல் இருப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக காேயில் நிர்வாகம் தரப்பில் அளித்த விளக்கத்தில் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பாதுகாப்பு பணிகளுக்காக வருபவர்கள் என பலரும் விசேஷ காலங்களில் வருவதால் அவர்களுக்கு அந்த அறைகளை ஒதுக்குவதால் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

இதுபோன்ற அதிகாரமிக்கவர்களுக்கே சுமார் 100க்கும் மேற்பட்ட அறைகள் சென்றுவிடுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், இந்த விவகாரத்தில் சாமானிய மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Read Full Article