திருப்பத்தூரில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூவிற்கு ஒரு குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வைத்தீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் - வளர்மதி தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தனித்துவம் கொண்ட பிரம்ம கமலம் மலர், இவர்களது வீட்டில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அழகாக மலர்ந்தது.

இதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த முருகன் - வளர்மதி குடும்பத்தினர், மலருக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு செய்தனர். வீட்டில் அரிய வகை மலர் பூத்திருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஆர்வத்துடன் வந்து மலரைப் பார்த்து வியந்ததுடன், பக்தியுடன் தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூ தங்களது வீட்டில் பூத்ததால் அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், மலருக்கு குடும்பத்தினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

பிரம்ம கமலம் பூ என்றால் என்ன?

இந்து புராணங்களின்படி, இந்த பூ படைப்புக் கடவுளான பிரம்மதேவனின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த மலர் பூக்கும் இடத்தில் செல்வமும், நேர்மறை ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை.
இது ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் இரவு நேரத்தில் பூத்து, விடியற்காலைக்குள் வாடிவிடும் அதிசய மலராகும்.

இமயமலைப் பகுதிகள் (உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம்) போன்ற குளிர்ந்த மலைப் பகுதிகளில் இயற்கையாக வளர்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் தேசிய மலராகவும் இது உள்ளது. பொதுவாக ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்கால இரவுகளில் இது பூக்கும்.

வீடுகளில் வளர்க்கப்படும் வகை கற்றாழை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் இலையின் விளிம்புகளிலிருந்தே மொட்டுகள் தோன்றும். நேரடியாகப் படும் கடுமையான வெயிலைத் தவிர்த்து, நிழல் பாங்கான மிதமான ஒளி உள்ள இடங்களில் வளர்க்க வேண்டும். இந்த பூ கற்றாழை வகை என்பதால் அதிக தண்ணீர் தேவையில்லை. மண் காய்ந்த பிறகு தண்ணீர் விட்டால் போதுமானது.

பாரம்பரிய இமயமலை மருத்துவத்தில் (ஆயுர்வேதம் மற்றும் திபெத்திய மருத்துவம்) இதன் இதழ்கள் மற்றும் தண்டுகள் காய்ச்சல், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Source: Read Full Article