திமுக என்பது கொள்கைகளால் கட்டமைக்கப்பட்ட கட்சி என்று அக்கட்சியின் நிர்வாகிககளும், தலைவர்களும் பெருமையுடன் கூறுவார்கள். பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அண்ணா திமுக-வைத் தொடங்கினாலும், அவரை கொள்கைத் தலைவராக கொண்டே தற்போது வரை திமுக இயங்கி வருகிறது.

துரைமுருகன் இல்ல திருமண விழா:

திமுக-வின் கடவுள் மறுப்புக் கொள்கையையும், திராவிடத்தையும் மிகப்பெரிய அளவில் கொள்கையாக கொண்ட கட்சியாக உள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகனின் பேத்தி திருமணம் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த திருமணத்தில் வேதங்கள் முழங்க துரைமுருகன் பேத்தி செந்தாமரை - தீபக் ரவி ஆகியோர் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு அனைவரும் வாழ்த்து கூறியிருந்தாலும், பெரியார் இயக்க அமைப்பினர், பெரியாரிஸ்ட்கள் வேதங்கள் முழங்க திமுக தலைவர் வீட்டிலே திருமணம் நடந்ததற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேடையில் கடவுள் மறுப்பு; வீட்டிற்குள்ளே வேதங்களா?

மேடைகள் தோறும் கடவுள் மறுப்புக் கொள்கையை பேசிவிட்டு, சமஸ்கிருத மொழிக்கு எதிராகவும் பேசிவிட்டு தற்போது தங்கள் வீட்டு விசேஷத்திற்கு மட்டும் இதுபோன்று வேதங்கள் முழங்க திருமணம் செய்யலாமா? என்று சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருணாநிதியுடன் தொடக்க காலம் முதல் பயணித்தவர், மு.க.ஸ்டாலினுடனும் பயணித்தவர், உதயநிதியை வளர்த்தவர் என்று துரைமுருகன் திமுக-வின் தூணாக 1971ம் ஆண்டு முதல் திமுக-வில் இருந்து பயணிக்கிறார். 10 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த துரைமுருகன் மேடை ஒன்றில் சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என்று விமர்சித்துப் பேசியிருப்பார்.

இரட்டை வேடமா?

ஆனால், தற்போது அவரது இல்ல திருமண விழாவில் சமஸ்கிருதங்களை ஐயர்கள் முழங்க அவரது பேத்தி திருமணம் நடந்துள்ளது. இவை இரண்டையும் ஒப்பிட்டு அவரை விமர்சித்து வருகின்றனர். ஓட்டுக்காக இரட்டை வேடமா? என்று துரைமுருகனையும், திமுக-வையும் விமர்சித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, திமுக-வின் பொதுச்செயலாளர் துரைமுருகனே அக்கட்சியின் மூத்த தலைவர் ஆவார். ஆனால், கருணாநிதியுடன் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பயணித்த அவரே தனது இல்லத் திருமண விழாவில் பெரியார் கொள்கைக்கு எதிராக செயல்படலாமா? என்று பெரியாரிஸ்ட்கள் பலரும் திமுக-வை விமர்சித்து வருகின்றனர்.

விமர்சனம்:

எதிர்க்கட்சிகள் பலரும் திமுக தலைவர்கள் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவராக இருந்தாலும், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர இறைபக்தி கொண்டவர். இந்த விவகாரத்திலும் பலரும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். தற்போது துரைமுருகன் இல்ல திருமணம் வேதங்கள் முழங்க நடந்திருப்பதால் இதுவும் தொடர்ந்து விமர்சனங்களை உண்டாக்கி வருகிறது.

Source: Read Full Article