தமிழகத்தில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது மதுரை தனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தை விட இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி ஃபாலோயர்ஸ் ஒரே நாளில் எகிறியுள்ளது.

தனிஷ்க் ஜுவல்லரி கொள்ளை

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி டாடா குழுமத்திற்கு சொந்தமான தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு விதமான நகைகள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் வழக்கம் போல 11ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை ஊழியர்கள் கடையை திறந்து பார்த்த போது பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காட்டிக்கொடுத்த டாட்டூ

இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் மேலாளருக்குத் தகவல் தெரிவித்ததுடன், காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது நவம்பர் 1ம் தேதி கையில் கட்டுப் போட்டபடியும், 2ம் தேதி தொப்பி அணிந்தபடியும் வாடிக்கையாளரை போல வந்து சென்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த காட்சிகளையும் 12ம் தேதி முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபரின் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இருவரது கைகளிலும் ஒரே மாதிரியான டாட்டூ இருப்பது தெரியவந்தது. மேலும், நேதாஜி மெயின் ரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஹெல்மெட் மற்றும் கையுறை அணிந்தபடி இளைஞர் ஒருவர் பைக்கில் வேகமாக செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதையும் படிங்க: தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!

இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி

இதன் அடிப்படையில் மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் நிஷாந்த் என்பது தெரியவந்ததை அடுத்து அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த நிஷாந்தின் காதலியும், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவரிடம் இருந்த நகைகளுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை நிஷாந்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஃபாலோயர்ஸ்

இவ்வளவு களேபரத்தின் மத்தியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நகை கொள்ளை வழக்கில் கைது செய்வதற்கு முன்னதாக மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 1 லட்சத்து 52 ஆயிரம் (152K) பேர் பின்தொடர்ந்து வந்தனர். ஆனால், நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற பிறகு மீனாட்சியின் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேர் புதிதாக அவரைப் பின்தொடரத் தொடங்கியதால், தற்போது அவரது ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்தைத் (192K) தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

சீரழியும் இளைஞர்கள்

நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்று தெரிந்த பிறகும் அவரது ஃபாலோயர்ஸ் அதிகரித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலரும் தங்களது ஆதங்கத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இன்றைய நவீன யுகத்தில் தகவல் தொடர்புக்காகவும், அறிவுப் பகிர்வுக்காகவும் உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் இன்று இளைஞர்களின் கைகளில் சிக்கி சீரழிந்து வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் 30 வினாடி வீடியோவுக்காக ஓடும் ரயிலின் முன்பு நிற்பது, பைக் சாகசங்கள் செய்வது, ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பது என உயிரைப் பணயம் வைத்து விபரீதங்களில் சிக்கி உயிரிழக்கும் அவலங்கள் தினசரி செய்திகளாகிவிட்டன. எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் சைபர் குற்றங்களிலும் இளைஞர்கள் சிக்குவது அதிகரித்து வருகிறது. இது வருங்காலத்தில் எங்கு போய் முடிய போகிறதோ என்று சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த இளைஞர்களுக்குப் பெற்றோர்களும் சமூகமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Source: Read Full Article