பல எலும்பு முறிவுகள் மற்றும் கடுமையான உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 18 மாத யானைக் குட்டியான மாயா, சிறப்பு சிகிச்சைக்காக கேரளாவிலிருந்து குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள வந்தாராவுக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கேரள வனத்துறையின் பல மாத கால சிகிச்சை யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணாததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மாயா பிறந்த சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டது

2025ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி கேரளாவின் மலையாட்டூர் பிரிவில் உள்ள கப்ரிகாட் அருகே ஆற்றை கடந்த பிறகு யானை குட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. புதிதாகப் பிறந்த அந்தக் யானை குட்டி பலவீனமாகவும், கடுமையான நீர்ச்சத்து குறைபாட்டுடனும் இருந்ததுடன், தன் தாயின் முதல் பாலையும் அருந்தவில்லை. தாய் யானை திரும்பி வராததால், வனத்துறையினர் குட்டியை மீட்டு அபயாரண்யத்திற்கு அழைத்து வந்தனர். இதற்கு மாயா என்று பெயர் சூட்டினர். இந்த யானையால் இயற்கையாக உணவு உண்ண முடியாததால், வனத்துறை அதிகாரிகள் அதுக்கு 24 மணி நேரப் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்தனர். உதவி வன கால்நடை அதிகாரி டாக்டர் பினோய் சி. பாபு, வனத்துறை ஊழியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக சுகாதார கண்காணிப்புக் குழுவின் கீழ் யானையை பராமரித்தனர். யானைக்கு முதல் ஆண்டில் ஏற்பட்ட பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு தொடர்ச்சியான சிகிச்சை வழங்கப்பட்டது.

கீழே விழுந்த பிறகு உடல்நிலை மோசமடைந்தது

2026 ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று, மாயா விளையாடிக் கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்து தனது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அதன் உடல்நிலை மோசமடைந்தது. சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் அளிக்கப்பட்ட போதிலும், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில், யானையால் நிற்கவே முடியவில்லை, மேலும் திரவ உணவை மட்டுமே உட்கொள்ளத் தொடங்கியது.

பூக்கோடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் தினேஷ் பி.டி. அக்டோபர் 24 அன்று நடத்தப்பட்ட பரிசோதனையில், பல எலும்பு முறிவுகள், கடுமையான எலும்பு பலவீனம், மார்புத் தொற்று மற்றும் நீண்டகால அசைவின்மையால் ஏற்பட்ட புண்கள் கண்டறியப்பட்டன. இதனால், யானையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரியவந்தது.

குஜராத்துக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைத்த நிபுணர்கள்

யானையின் மேல்சிகிச்சைக்காக தலைமை வனவிலங்குப் பாதுகாவலர் நவம்பர் 1 அன்று குஜராத்தின் வந்தாராவின் கால்நடை மருத்துவக் குழுவுடன் ஒரு கலந்தாலோசனைக்கு ஏற்பாடு செய்தார். அக்குழுவினர் மாயாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள், எக்ஸ்-ரே மற்றும் இரத்த பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தனர்.

நவம்பர் 4 அன்று நடைபெற்ற மருத்துவ வாரியக் கூட்டத்தில், வனத்துறை அதிகாரிகளும், அசாமைச் சேர்ந்த யானைகளுக்கான கால்நடை மருத்துவரும் வந்தாராவின் கால்நடை ஆலோசகருமான பத்மஸ்ரீ டாக்டர் குஷால் கொன்வர் சர்மாவும் கலந்துகொண்டனர். சிகிச்சைக்குப் பலனளிக்கக்கூடிய ஒரு அடிப்படைக் குறைபாட்டை டாக்டர் சர்மா கண்டறிந்து, சிறப்பு சிகிச்சைக்காக மாயாவை வந்தாராவுக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தார். வந்தாராவின் யானைகள் பராமரிப்பு மையத்தின் தலைமைக் கால்நடை மருத்துவரான டாக்டர் யதுராஜ் கட்பேகர், அந்தப் பரிந்துரையை ஆதரித்தார். மருத்துவ வாரியம் இடமாற்றத்திற்கு ஒருமனதாக ஒப்புக்கொண்டது, அதற்கான உத்தரவும் மறுநாள் பிறப்பிக்கப்பட்டது.

விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட குட்டி யானை

வந்தரா, உயிர் காக்கும் கருவிகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய வான்வழிப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தது. மூன்று யானைக் கால்நடை மருத்துவர்கள், துணைக் கால்நடை மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள், அவசரகால மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களை எடுத்துக்கொண்டு மாயாவுடன் சென்றனர். தொடர் சிகிச்சையை உறுதி செய்வதற்காக, கேரள வனத்துறையானது உதவி வன கால்நடை அதிகாரி டாக்டர் பினோய் சி. பாபு மற்றும் மாயாவின் நெருங்கிய பராமரிப்பாளரான நிகில் பாபு ஆகியோரையும் அனுப்பினர்.

வந்தாராவில், மாயாவுக்கு 24 மணி நேர கால்நடை மருத்துவப் பராமரிப்பு, வலி நிவாரணம் மற்றும் மேல் சிகிச்சைகள் வழங்கப்படும். அதே சமயம், யானையின் நிலையைப் பொறுத்து கூடுதல் சிகிச்சைகளும் பரிசீலிக்கப்படலாம்.

மத்திய மண்டல சமூக வனவியல் வனப் பாதுகாவலரின் தலைமையில் இயங்கும் கேரள கண்காணிப்புக் குழு, சிகிச்சையின் போது யானையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும். மாயாவின் சிகிச்சை முடிந்தவுடன், அபயாரண்யத்திற்குத் திரும்புவதற்கு வந்தரா மருத்துவக் குழு வழிவகை செய்யும். யானையின் உடல்நிலை தற்போதைக்கு எதுவும் கூறமுடியாத நிலைமை இருக்கிறது. ஆனால் இந்த இடமாற்றம், நிபுணர்களுக்கு மேல் சிகிச்சை முறைகளை ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும். மாயவுக்காக பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சமூகவலைதளங்களிலும் பலரும் யானை உடல்நலம் பெற வேண்டும் பதிவிட்டு வருகின்றனர்.

Source: Read Full Article