சென்னை கொடுங்கையூரில் அரசு பேருந்தின் நடத்துனரை பட்டப்பகலில் இளைஞர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூரில் கடந்த 13-ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில், மத்திய மின்சார பணிமனையைச் சேர்ந்த தடம் எண் 2C பேருந்து கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தைப் பின்னோக்கி எடுப்பதற்காக நடத்துனர் நித்திய நாதன் விசில் ஊதி வழி காட்டிக் கொண்டிருந்தார்.

நடத்துனர் மீது கொடூர தாக்குதல்

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், முன்விரோதம் காரணமாக நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நடத்துனரின் காதைக் கடித்துத் துப்பியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரின் நண்பர்களும் அங்கு வந்து நடத்துனரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

மேலும், நடத்துனரின் முதுகில் கத்தியால் கீறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை கண்ட பயணிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதில் படுகாயமடைந்த நடத்துனர் நித்திய நாதன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளார்.

வீடியோ காட்சிகள்

இந்த சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுனர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article