வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி , வரும் 18-ம் தேதி தீவிர புயலாக வலுப் பெறும். இது கரையை கடக்குமிடம் குறித்து நாளை (நவம்பர் - 15) தெரிய வரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து , நாளை ( நவம்பர் 15 ) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் வலுப்பெறக் கூடும்.

இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நவ.16-ம் தேதி மாலை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, 18-ம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும்.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவம்பர் 15) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக் கூடும். இதர தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவம்பர் 16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

"லேசான மழை பெய்ய வாய்ப்பு"

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவம்பர் 15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை முதல் நவம்பர் 18-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, வரும் 18-ம் தேதி வரை வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

Source: Read Full Article