சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டு வரும் சரிவு, தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ள பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்காக அச்சப்படாமல் நீங்கள் என்ன செய்யணும் தெரியுங்களா?

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ள சில வாடிக்கையாளர்களுக்கு, கடன் தொகையில் ஒரு பகுதியை உடனடியாகச் செலுத்த வேண்டும் அல்லது அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொள்ள வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நகைக்கடன் பெற்றவர்கள் மத்தியில் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக வங்கிகள் தங்க நகைகளின் எடை, தூய்மை மற்றும் அன்றைய சந்தை விலை ஆகியவற்றைக் கணக்கிட்டு அதற்கேற்ப கடன் வழங்குகின்றன. இதற்கு கடன் மதிப்பு விகிதம் (Loan To Value - LTV) என்று பெயர். ஒருவர் தனது தங்க நகைகளை அடகு வைத்து ரூ.80 ஆயிரம் கடன் பெற்றுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த நகைகளின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சமாக இருந்திருக்கலாம். ஆனால் தங்கத்தின் விலை சரிவடைந்து அதே நகைகளின் சந்தை மதிப்பு குறைந்துவிட்டால், அடமானத்தின் மதிப்புக்கும் வழங்கப்பட்ட கடன் தொகைக்கும் இடையிலான விகிதத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

இதனால் வங்கிகள் தங்களது கடன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகையைச் செலுத்துமாறு அறிவுறுத்தும் நிலை உருவாகிறது. குறிப்பாக, கடன் தொகைக்கும் அடமான நகைகளின் தற்போதைய மதிப்புக்கும் இடையிலான விகிதம் அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டும் சூழல் ஏற்பட்டால், வங்கிகள் கடன் பெற்றவர்களைத் தொடர்புகொண்டு நிலுவைத் தொகையைக் குறைக்குமாறு கேட்கலாம். இதற்காக சில வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் தங்கத்தின் விலை குறைந்துவிட்டது என்பதற்காக அனைத்து வாடிக்கையாளர்களும் உடனடியாக நகைகளை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒவ்வொருவரின் கடன் ஒப்பந்தம், கடன் தொகை மற்றும் அடமான நகைகளின் தற்போதைய மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே வங்கிகளின் நடவடிக்கைகள் அமையும்.

வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தால் பொதுமக்கள் பதற்றமடையாமல் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை முதலில் முழுமையாகப் படிக்க வேண்டும். அசல் கடன் தொகை, இதுவரை செலுத்திய வட்டி, மீதமுள்ள நிலுவைத் தொகை, நகைகளின் மதிப்பு மற்றும் கூடுதலாகச் செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். வங்கி ஏன் கூடுதல் தொகையைக் கேட்கிறது என்பதற்கான காரணத்தையும் அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கடன் ஒப்பந்தத்தில் இதுதொடர்பாக என்ன நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதையும் ஆய்வு செய்வது அவசியம். கடன் திட்டத்தின் விதிமுறைகள் அனுமதித்தால், இதுவரை சேர்ந்துள்ள வட்டியைச் செலுத்தி கடனைத் தொடர்ந்து பராமரிக்க முடியுமா என்று வங்கியிடம் கேட்கலாம். அதேபோல், வங்கியின் அறிவுறுத்தலின்படி கடன் நிலுவையில் ஒரு பகுதியைச் செலுத்துவதன் மூலம் அடமானத்தின் மதிப்புக்கும் கடன் தொகைக்கும் இடையிலான விகிதத்தைச் சீரமைக்க முடியும். பொருளாதார வசதி இருப்பவர்கள் முழுக் கடனையும் செலுத்தி நகைகளை மீட்டுக்கொள்ளலாம்.

பின்னர் தேவை ஏற்பட்டால் தற்போதைய தங்கத்தின் மதிப்பு மற்றும் வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப புதிதாக நகைக்கடன் பெறலாம். ஆனால் புதிதாகக் கடன் பெறும்போது முன்பு பெற்ற அதே தொகை கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இதற்கிடையே, தங்கத்தின் விலை குறைந்துவிட்டது என்பதற்காக வங்கிகள் அனைத்து அடகு நகைகளையும் உடனடியாக ஏலம் விட முடியாது. கடன் ஒப்பந்தம், கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ள விவரம் மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடன் நிலுவையில் இருப்பவர்கள் வங்கியிலிருந்து வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அலட்சியம் செய்யக்கூடாது. ஏலம் தொடர்பான நோட்டீஸ் வந்தால், கடனைச் செலுத்தி நகைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறித்து உடனடியாக வங்கியை அணுக வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் தங்கம் மற்றும் வெள்ளி அடமானக் கடன் வழிகாட்டுதல்களின்படி, கடனை முழுமையாகச் செலுத்திய பிறகு அடமான நகைகளை அன்றே அல்லது அதிகபட்சம் 7 வேலை நாட்களுக்குள் திருப்பி வழங்க வேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் தவறால் காலதாமதம் ஏற்பட்டால், கூடுதல் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், அடமான நகைகளை ஏலம் விடுவதற்கு முன்பாக வாடிக்கையாளருக்கு உரிய அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளும் உள்ளன.

எனவே, தங்கத்தின் விலை சரிந்ததால் அடகு வைத்துள்ள அனைவரும் உடனடியாக நகைகளை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலை முழுமையாக உண்மை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. வங்கிகள் அனுப்பும் நோட்டீஸ்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரின் கடன் நிலை மற்றும் ஒப்பந்த நிபந்தனைகளைப் பொறுத்து மாறுபடும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்து, தங்களது கடன் விவரங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வதே சிறந்தது.

Source: Read Full Article