Anbil Mahesh Case: தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் முத்துக்குமாரின் வாக்குமூலத்தால், அன்பில் மகேஷின் மீதான பிடி இறுகுவதாக கூறப்படுகிறது.

அன்பில் மகேஷ் மீது இறுகும் பிடி

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்க, சுமார் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்ந்து பல்வேறு பரபரப்புகளை கிளப்பி வருகிறது. அரசகுமார் கைதை தொடர்ந்து முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட உடனே, நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது அவர் அளித்துள்ள வாக்குமூல தகவல்களால், அன்பில் மகேஷ் மீதான பிடி இறுகுவதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய விசாரணையின் போதும் அவருக்கு ஜாமின் கிடைப்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.

முத்துகுமார் அளித்த வாக்குமூலம்:

சரணடைந்த முத்துக்குமாரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது அளித்த வாக்குமூலத்தில், “நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகத்தில் எனக்கென ஒரு அறை மற்றும் அரசு வாகனம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதனடிப்படையில் எனக்கும் அரசுக்கு நெருக்கமான நட்புறவு இருப்பதை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து மறைமுகமாக உணர்த்தி வந்தேன். அன்பில் மகேஷிடம் எனக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக தனியார் பள்ளி நிர்வாகிகள் எனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தனர். திமுக நிர்வாகி அரசகுமார் எனது நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில் தான் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அங்கீகார காலத்தை, 20 ஆண்டுகளாக நீட்டித்து தமிழக அரசு விதிகளில் திருத்தம் மேற்கொண்டது.

மிரட்டி பணம் வசூலிக்க திட்டம்

அரசின் புதிய விதிகள், அதிகார மட்டத்தில் எங்களுக்கு இருந்த நெருக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி, தனியார் பள்ளிகளிடம் இருந்து பணம் வசூலிக்க திட்டமிட்டோம். இதற்காக வழக்குகளில் சிக்கிய மற்றும் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த தனியார் பள்ளிகளின் பட்டியலை தயார் செய்தோம். இதுபோக போதிய விளையாட்டு மைதானம், கட்டடங்கள் கட்டி முடிக்கப்படாத தனியார் பள்ளிகள் குறித்த தகவல்களை சேகரித்தோம். இதற்கு துறைசார்ந்த அதிகாரிகள் சிலரும் உதவினர். பிரச்னைக்குரிய தனியார் பள்ளிகளை தொடர்புகொண்டு, எங்களை மீறி உங்களால் அங்கீகாரம் பெற முடியாது என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினோம்.

இதையும் படியுங்கள்: Viral Video: "எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்

மாவட்ட வாரியாக கூட்டம்

இதையடுத்து மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்த, அதற்கான ஏற்பாடுகளை அரசகுமார் செய்துகொடுத்தார். அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி பல தனியார் பள்ளிகளிடமிருந்து பல கோடி ரூபாய் பணம் வசூலித்தோம். இது அப்போதைய அமைச்சர் அன்பில் மகேஷிற்கு தெரியும். திமுக வட்டாரத்தில் எங்களுக்கு இருந்த நெருக்கம் காரணமாக துறைசார்ந்த அதிகாரிகள் சிலர் மறைமுகமாக எங்களுக்கு உதவினர்” என முத்துக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ஜாமின் மனு நிராகரிப்பா?

முன்னாள் அமைச்சருக்கு தெரிந்தே பண வசூல் நடத்தியதாக முத்துக்குமார் தெரிவித்து இருப்பதாக கூறப்படுவது, அன்பில் மகேஷ் மீதான போலீசாரின் பிடியை மேலும் இறுக்கியுள்ளது. இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள அவரது ஜாமின் மனு மீதான விசாரணையின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் மனுவை நிராகரித்ததை தொடர்ந்து, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article