தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் ரூ.6.78 கோடி மதிப்பிலான கள்ள ரூ.500 நோட்டுகளை அச்சடித்த கும்பலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் கள்ள நோட்டு தயாரிப்பது எப்படி எனக் கற்றுக்கொண்டு, வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனை

ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ள நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாகவும், இதன் பின்னணியில் திட்டமிட்டு ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடந்த நவம்பர் 1-ம் தேதி அப்துல்லாபூர்மெட் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த காரில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், போலி காவல்துறை அடையாள அட்டைகள், போலி கைத்துப்பாக்கி, வாக்கி-டாக்கி கருவிகள் மற்றும் நான்கு செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், காரில் இருந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

யூடியூப் மூலம் கள்ள நோட்டு தயாரிக்கக் கற்ற கும்பல்

விசாரணையில், ஹைதராபாத்தில் உள்ள குண்ட்லூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 7 பேர் கொண்ட கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களைப் பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் முறையைக் கற்றுக்கொண்ட அவர்கள், அதற்கான இயந்திரங்களை வாங்கி வீட்டிலேயே கள்ள நோட்டுகளைத் தயாரித்துள்ளனர்.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்காகவும் அந்தக் கும்பல் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது.

ரூ.1 லட்சத்திற்கு ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை கள்ள நோட்டுகள்!

ஒவ்வொரு ரூ.1 லட்சம் உண்மையான பணத்திற்கும் ஈடாக ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான கள்ள நோட்டுகளை வழங்குவதாகக் கூறி பலருக்கு ஆசை காட்டியுள்ளனர்.

இதனை நம்பி பணம் வாங்க வருபவர்களின் வீடுகளுக்குக் கும்பலைச் சேர்ந்த சிலர் போலி காவல்துறை அடையாள அட்டைகளுடன் சென்றுள்ளனர். தங்களை போலீசார் எனக் காட்டிக்கொண்டு, அவர்களிடம் இருந்த பணத்தைப் பறிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரூ.6.78 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து, கும்பல் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அச்சடிக்கப்பட்ட நிலையில் இருந்த 134 கட்டு போலி ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.6.7 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கள்ள நோட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் இயந்திரங்கள், லேப்டாப்கள், லேமினேஷன் இயந்திரம் மற்றும் பேப்பர் வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

4 பேர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கள்ள நோட்டுகளைத் தயாரித்ததுடன், போலி காவல்துறை அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பணம் பறித்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பலின் செயல்பாடுகள் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article