திருப்பத்தூரில் லடாக் பகுதியில் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேசியக்கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் அருகே காந்திநகர் பகுதியில் வசிப்பவர் மனோகரன் மகன் கோவிந்தராஜ் என்கிற காமராஜ். இவர், கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ் மற்றும் துப்பாக்கி இன்ஷார்ஜ் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கிருத்திகா என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு ஆறு மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி இந்திய எல்லை பகுதியான கார்கில் அடுத்த லே லடாக் பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட சென்றபோது கேரளா பகுதியைச் சேர்ந்த அருண் ராஜ் வாகனத்தை இயக்க, சக ராணுவ வீரர்களுடன் பயணித்தபோது மலை உச்சியிலிருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தாரிடம் ராணுவ வீரரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் மற்றும் அதிமுக, திமுக, தவெக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் ராணுவ வீரரின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அணிவகுப்பு முடிந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் வீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைக் கண்டு உறவினர்கள் கத்தி கதறி அழுத சம்பவம் காண்பவர் நெஞ்சை கண்கலங்கச் செய்தது.

ஆறு மாத கைக்குழந்தை உள்ள நிலையில் சிறுவயதில் ராணுவ வீரர் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source: Read Full Article