தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.100 மதிப்பிலான வெற்றி சிறப்பு காய்கறித்தொகுப்பு திட்டம் நாளை முதல் தொடங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு, ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மூலம் இந்தக் காய்கறித் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. சென்னையில் கூடுதலாக 4 நடமாடும் காய்கறிக் கடைகள் மூலம் விற்பனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன காய்கறிகள் இடம்பெறும்?

வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தொகுப்பில் 10 வகை காய்கறிகள் இடம்பெற உள்ளன. அவை முறையே அரைக்கிலோ அளவிலான பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி, கால் கிலோ அளவிலான கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு, 200 கிராம் அளவிலான கேரட் மற்றும் பின்ஸ், 100 கிராம் அளவில் பச்சை மிளகாய், எலுமிச்சை, 50 கிராம் எடையுள்ள இஞ்சி மற்றும் 400 - 450 கிராம் எடையிலான தேங்காய் உள்ளிட்டவை வழங்கப்படுமென கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

நவம்பர் 5 முதல் 7-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த சிறப்பு விற்பனை நடைபெற உள்ள நிலையில், அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ.100-ஐ விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நுகர்வோரிடம் வசூலிக்கக்கூடாது எனவும் கூட்டுறவு விற்பனை நிலைய பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவிறுத்தியுள்ளது.

Source: Read Full Article