ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அடுத்தடுத்து இரண்டு பயணிகள் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்றொரு பெண் பயணி உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் ரயில், பாம்பன் நடுக்கடல் பகுதியில் உள்ள ரயில் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாகத் திடீரென நடுக்கடலில் குதித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அளித்த தகவலின் பேரில், ரயில்வே போலீசார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கடலில் குதித்த இளைஞர் உயிரிழப்பு

இந்நிலையில், இன்று பாம்பன் அருகே உள்ள முள்ளிமுனை தீவு பகுதியில் அந்த இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மரைன் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இன்று காலை மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பன் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்துள்ளார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பெண் படுகாயம்

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செயல்பட்டு அந்தப் பெண்ணை மீட்டனர். உடனடியாக அவருக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அந்தப் பெண் மயக்க நிலையில் உள்ளதால், அவர் குறித்த விவரங்களோ, தற்கொலை முயற்சிக்கான காரணமோ உடனடியாகத் தெரியவரவில்லை. அவரது உடல்நிலை சீரான பின்னரே விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள், புதிய பாம்பன் பாலத்தைக் கடந்து செல்வது வழக்கம். ரயில்கள் பாலத்தைக் கடக்கும்போது சிலர் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் ஆபத்தான முறையில் பயணிப்பதும், தவறி விழுந்து மீனவர்களால் மீட்கப்படுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவங்கள் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடலுக்கு நடுவே செல்லும் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இதுபோன்ற விபரீதங்களைத் தடுக்கவும் ரயில்வே துறை கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Source: Read Full Article