மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - வரும் 24 -ந் தேதி கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட உள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா

கோயில் நகரம் என்று சும்மா பெயர் வைக்கவில்லை என்பது போல் திரும்பிய திசையெல்லாம் மதுரையில் கோயில்கள் நிறைந்திருக்கும் மதுரை. மீனாட்சியம்மன் கோயில்தான் மதுரையையே நிர்மாணிக்கிறது. ஒவ்வொரு நாளும் திருவிழா போல் மக்கள் கூட்டம் இருக்கும். மீனாட்சியம்மன் கோயில் ஆன்மீகத்தை மட்டுமல்ல கலை, கலாச்சார பண்பாட்டு இயக்கத்தோடு தொடர்புடையது என உறுதிப்படுத்துகிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் சித்திரை, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மாசி திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தது, இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 27 -ந் தேதி வரை நடக்கிறது.

ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சுவாமி சன்னதி கொடிமரத்தின் அருகே யாகசாலை பூஜை நடத்தப்பட்டு கார்த்திகை கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து புனிதநீரால் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்து, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அப்போது அங்கு சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி-சுந்தரரேசுவரர் எழுந்தருளினர். பின்னர் 2-ம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும்.

இந்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். விழாவில் முக்கிய நாளான 24 -ந் தேதி கார்த்திகை தீப தினத்தன்று மாலையில், கோவில் வளாகம், பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றுவார்கள். மேலும் அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்வார்.

Source: Read Full Article