புதுச்சேரி: பேஸ்புக் மூலம் லண்டனை சேர்ந்த பெண் என அறிமுகமாகி, ஐபோன் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அனுப்புவதாகக் கூறி புதுச்சேரியை சேர்ந்த 44 வயது நபரிடம் ரூ.12.59 லட்சம் மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரை சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் கைது செய்தனர். இந்த மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

பேஸ்புக் மூலம் அறிமுகமான லண்டன் பெண்!

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவருக்கு பேஸ்புக் சமூக வலைதளம் மூலம் 'பிளோரன்ஸ் சிமாசன்' என்ற பெயரில் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். முதலில் இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில், நாளடைவில் வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

அப்போது அந்தப் பெண், புதுச்சேரியைச் சேர்ந்த நபரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் அன்பாகப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவருக்கு ஐபோன், விலை உயர்ந்த காலணிகள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்களை லண்டனில் இருந்து அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த நபர், பரிசுப் பொருட்களை அனுப்புவதற்காக தனது வீட்டு முகவரியையும் அந்தப் பெண்ணிடம் வழங்கியுள்ளார்.

சுங்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி மிரட்டல்!

இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பேசுவதாகக் கூறி சில மர்ம நபர்கள் அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, அவரது பெயரில் தங்க நகைகள், அமெரிக்க டாலர்கள் மற்றும் ஐபோன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பார்சல் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தப் பார்சலைப் பெறுவதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், பணம் செலுத்தாவிட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளனர். வெளிநாட்டில் இருந்து பரிசுப் பொருட்கள் வந்துள்ளதாகக் கூறியதை உண்மை என நம்பிய அந்த நபர், அவர்கள் கேட்ட பணத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

நண்பர்களின் வங்கிக் கணக்குகளிலும் பணம் அனுப்பியதால் அதிர்ச்சி!

கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பல்வேறு தவணைகளாக, தனது வங்கிக் கணக்கு மட்டுமின்றி நண்பர்களின் வங்கிக் கணக்குகள் மூலமாகவும் மொத்தம் ரூ.12 லட்சத்து 59 ஆயிரத்து 800-ஐ மர்ம நபர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகும் பார்சல் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், பார்சல் விவரங்கள் மற்றும் பணம் செலுத்தியதற்கான ரசீதுகளைக் கேட்டுள்ளார். அப்போது எதிர்முனையில் இருந்தவர்கள் முறையான பதில் அளிக்காமல் தொடர்பைத் துண்டித்துள்ளனர். இதன் பின்னரே தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வங்கி கணக்குகள், வாட்ஸ் அப் எண்கள் மூலம் விசாரணை!

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகள், வாட்ஸ் அப் எண்கள் மற்றும் பேஸ்புக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பல் டெல்லியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நைஜீரிய கூட்டாளியுடன் சேர்ந்து மோசடி!

கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது கூட்டாளியான எபுகா என்பவருடன் இணைந்து புதுச்சேரியைச் சேர்ந்த நபரிடம் நூதன முறையில் பணம் பறித்தது தெரியவந்தது.

மேலும், மோசடி மூலம் கிடைத்த பணத்தில் தங்களது செலவுகளுக்குப் பயன்படுத்தியது போக மீதமுள்ள தொகையை வெஸ்டர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை மூலம் நைஜீரியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து மோசடிக்குப் பயன்படுத்திய மொபைல் போன்கள், சிம் கார்டுகள், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி. ராகவ் கூறியதாவது: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி அறிமுகமாகும் முன்பின் தெரியாத நபர்களிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து பணம் அல்லது பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி சுங்கக் கட்டணம், வரி, அபராதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி பணம் கேட்கும் நபர்களிடம் பணம் செலுத்த வேண்டாம்.

சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களின் உண்மையான அடையாளத்தை உறுதி செய்யாமல் எந்தவிதமான பணப் பரிவர்த்தனையிலும் ஈடுபடக் கூடாது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம். புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தை 0413-2276144, 9489205246 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழக்க வேண்டாம் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றொரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Source: Read Full Article