"பரம்பரை சொத்து - சுய சம்பாத்திய சொத்து"

பொதுவாக ஒரு குடும்பத்தில் தந்தை தனது முன்னோர் வழியில் சொத்து பெற்றார் என்றால் , அதை அவர் தன் சுய விருப்பத்துக்கு ஏற்ப மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்க முடியாது. ஆனால், தந்தை தனது சுய சம்பாத்தியம் வாயிலாக வாங்கிய சொத்து எனில் அதை தனது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும்.

இன்றைய சூழலில் , பெரும்பாலான குடும்பங்களில் தந்தை, தாய் பெயரில் உள்ள சொத்துகளை வாரிசுகள் எப்படி பெறுவது என்பதில் தான் பிரச்னை நிலவுகிறது. இந்த விஷயத்தில் சட்டப் படியான வழிமுறைகள் என்ன என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை.

குறிப்பாக பரம்பரை சொத்து, சுயசம்பாத்திய சொத்து ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பரம்பரை சொத்து என்றால், அதை பெற்ற தந்தை, அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு கொடுக்க வேண்டும். ஒரு வேளை தந்தை உயிரிருடன் இருக்கும் போது சொத்தை வாரிசுகளுக்கு பகிர்ந்து கொடுக்காமல் விட்டால், அவர் இறந்த பின், சட்டப்பூர்வ வாரிசுகள் அனைவரும் அதற்கான உரிமையை பெறுவர்.

"மனைவியின் தனிப்பட்ட சொத்து"

சுயசம்பாத்திய சொத்து வாங்கும் நபர் உயில் எழுதாமல் இறந்து விட்டால் , அவரது வாரிசுகள் உரிய ஆவணங்கள் வாயிலாக உரிமை கோர முடியும். ஆனால், இதில் ஒரு தந்தை தனது சுய சம்பாத்தியத்தில் கிடைத்த பணத்தை பயன்படுத்தி மனைவி பெயரில் ஒரு சொத்தை வாங்கினால் , அது அந்த பெண்ணின் தனிப்பட்ட சொத்தாக மாறி விடும்.

மனைவி தானாக கொடுத்தால் தவிர கணவரே நினைத்தாலும் அந்த சொத்தை பெற முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக , கணவர் வாங்கி கொடுத்த சொத்தை வைத்துள்ள மனைவி, தனது மகன்களில் யாராவது ஒருவருக்கு உயில் அல்லது செட்டில்மென்ட் வாயிலாக கொடுக்கலாம். அதில், பிற வாரிசுகள் உரிமை கோரி பிரச்னை செய்ய நினைத்தால் அதற்கு சட்ட வழிமுறைகள் ஆதரவாக இல்லை.

கணவர் வாங்கி கொடுத்தது என்றாலும், அந்த சொத்து மனைவியின் தனிப்பட்ட சொத்தாக மாறிய நிலையில் யாரும் அதில் உரிமை கோர முடியாது. அந்த சொத்தை மனைவி தனது மகன், மகள்களில் யாராவது ஒருவருக்கு தான் கொடுப்பார் என்று நினைப்பதும் தவறு.

சில சமயங்களில் இவ்வாறு சொத்து பெற்ற பெண்கள், அதை தங்கள், சகோதரி அல்லது, சகோதரியின் குழந்தைகளுக்கு கொடுக்க கூட வாய்ப்பு உள்ளது. மனைவியின் பெயரில் சொத்து வாங்கினால் , அது அப்படியே தங்கள் பிள்ளைகளுக்கு கிடைத்து விடும் என்ற கணவர்கள் நினைக்க கூடாது என்கின்றனர் சட்ட வல்லுனர்கள். கணவர் வாங்கி கொடுத்தது என்றாலும் , அந்த சொத்து மனைவியின் தனிப்பட்ட சொத்தாக மாறிய நிலையில் யாரும் அதில் உரிமை கோர முடியாது.

Source: Read Full Article