தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மொத்த அரசியல் களத்தையே மாற்றியுள்ளது. திமுக-தான் தங்கள் அரசியல் எதிரி என்று மீண்டும் மீண்டும் கூறி வந்த தவெக அவர்களை வீழ்த்தி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. ஆனால், தவெக-வை ஒருபொருட்டாகவே கருதாத திமுக ஆட்சியை இழந்தது.

உதயநிதியிடம் பொறுப்பை ஒப்படைத்த மு.க.ஸ்டாலின்:

தோல்விக்கான காரணம் என்ன? என்று கட்சியை மறுசீரமைப்பு செய்து திமுக-வை மீண்டும் பலம்பெறச் செய்ய வைக்க மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்தார். ஆனால், அந்த பணிகள் மந்தகதியிலே இருந்தது. இந்த சூழலில், இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்தி அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கலாம் என்ற திமுக-வின் எண்ணமும் நிறைவேறாமல் போனது.

அதிமுக, தவெக என இரு பெரும் கட்சிகள் திமுக-விற்கு சவாலாக உள்ள நிலையில், அடுத்த சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை, தனுஷ் என போட்டி பட்டியல் நீளும் என்று கருதப்படுகிறது. இதனால், திமுக-வை வலுப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த பொறுப்பை உதயநிதியிடம் மு.க.ஸ்டாலின் முழுமையாக ஒப்படைத்துள்ளார்.

உதயநிதி செயல்பாட்டில் அதிருப்தி:

ஆனால், அவரது செயல்பாடுகளில் மூத்த திமுக தலைவர்கள், நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. திமுக-விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை வாங்கித் தரும் சம்பவங்களில் உதயநிதியின் செயல்பாடு பெரியளவில் மக்களை கவரும் வகையில் இல்லை என்று அவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் உதயநிதி களத்தில் இறங்கி வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிக்கவில்லை என்ற ஆதங்கமும் கட்சியினர் சிலரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சென்னையில் மழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரம் அடைந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் துபாய் சென்றது அப்போது கட்சிக்குள்ளே விமர்சனங்களை எழுப்பியது.

மு.க.ஸ்டாலினிடம் சீனியர்கள் வேதனை:

விஜய்க்கு எங்கு சென்றாலும் மக்கள் வரவேற்பு தானாகவே கூட்டம் கூடுகிறது. திமுக-விற்கும் அதுபோல கட்சியினர் கூட்டம் திரளும் என்றாலும் இளைஞர்கள், பெண்கள் கூட்டத்தை திமுக பக்கம் ஈர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த பணியில் உதயநிதி சற்று மந்தமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது செயல்பட்டது போன்ற செயல்பாட்டை உதயநிதியிடம் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அவரது செயல்பாடுகள் மு.க.ஸ்டாலின் அளவிற்கு இல்லாதது கட்சியினருக்கு வேதனையை உருவாக்கியுள்ளது. இதனால், இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மு.க.ஸ்டாலினிடம் இதுதொடர்பாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ஓரங்கட்டப்படுவதுதான் காரணமா?

கட்சியின் சீனியர்களை உதயநிதி ஓரங்கட்டி இளைஞர்களுக்கும், இளைஞரணியினருக்கும் முக்கியத்துவம் அளிக்க நினைப்பதால் சீனியர்கள் சிலர் இதுபோன்று மு.க.ஸ்டாலினிடம் தகவல்களை கூறி வருவதாகவும் உதயநிதி ஆதரவாளர்கள் சிலரும் தெரிவித்து வருகின்றனர்.

Source: Read Full Article