தாராபுரம் இடைத்தேர்தலில் சிறுவனை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மதுராந்தகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என 5 முனை போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பதிலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இரு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அக்டோபர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே தாராபுரம், மதுராந்தகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.

குழந்தையை வைத்து சர்ச்சையை கிளப்பிய உதயநிதி

அப்போது ஓரிடத்தில் சிறுவனை தன்னுடைய வாகனத்தின் மீது ஏற்றிய உதயநிதி ஸ்டாலின், அச்சிறுவனுக்கு திமுக துண்டை அணிவித்தார். மேலும் சிறுவன் கையில் மைக்கை கொடுத்தார். அந்த சிறுவன் திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என கேட்டான். அதோடு மட்டுமல்லாமல் முதலமைச்சர் விஜயை அவமரியாதையாக பேசும் வகையில் தான் தெரிவித்த கருத்தை அந்த சிறுவனை வைத்து சொல்லவும் வைத்தார். இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.

சிறுவனை வைத்து தேர்தல் பரப்புரை செய்த உதயநிதிக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தாராபுரம் காவல்நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதலமைச்சர் விஜயை அவமதிக்கும் வகையில் சிறுவனை உதயநிதி ஸ்டாலின் பேச வைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்ததாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையில் திமுக தலைவர் ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறார்களை ஈடுபடுத்துவது குற்றம்

தேர்தல் விதிகளின்படி, தேர்தல் பரப்புரை அல்லது வாக்கு சேகரிக்கும் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முற்றிலும் தடை விதித்துள்ளது. தேர்தல் பேரணிகள்,பொதுக்கூட்டங்கள்,கட்சியின் துண்டுப் பிரசுரங்கள்,சுவரொட்டிகள், கோஷங்கள் எழுப்புவது, கட்சியின் சின்னங்கள், உடைகள் அல்லது தொப்பிகளை அணிய வைப்பது, வேட்பாளர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தின் போது குழந்தைகளைக் கைகளில் ஏந்துவதோ, வாகனங்களில் அழைத்துச் செல்வதோ அல்லது வாக்கு சேகரிக்க கூடாது என எதற்கும் சிறுவர், சிறுமியர்களை பயன்படுத்தக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article