காங்கிரசையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும், ஆனந்தும் தெரிவித்துள்ளனர்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் ஆர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எங்கள் பலம் தெரிய காரணம்

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆனந்த், “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள் காங்கிரசுடன் கூட்டணி சேர்வதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அது நடைபெறவில்லை அது நடைபெறாமல் இருந்தது ஒரு விதத்தில் நல்லது என்ன சொல்லலாம் காரணம் எந்த ஒரு கூட்டணி இல்லாமல் தனித்து நின்றதால் எங்களுடைய பலம் என்னவென்று எங்களுக்கு தெரிந்தது. முதலமைச்சர் விஜய்யின் செயலுக்கும் சொல்லுக்கும் கிடைத்த ஓட்டு 108 தொகுதிகளில் நாங்கள் வெல்ல காரணமாக அமைந்தது.

<iframe title="MK Stalin vs Vijay | "நானும் கத்துறேன்! BRO... CM SIR என்ன பயம்” ஸ்டாலின் பதிலடி" src="https://www.youtube.com/embed/M7Di5RINQcs" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

அதே சமயம் எங்களின் இக்கட்டான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி கை கொடுத்தது. அதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் வெற்றி பெற அனைவரும் வாக்களிக்க வேண்டும். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தமிழக வெற்றிக் கழகத்தினர் தினமும் வந்து நன்றாக வேலை செய்வதாக சொன்னார்கள் அதுதான் எங்கள் தலைவர் விஜயின் வளர்ப்பு” என தெரிவித்தார்.

நட்பின் அடிப்படையில் உருவான கூட்டணி

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருந்தால் 1967 ஆம் ஆண்டிற்கு பிறகு நிச்சயம் 60 முதல் 70 இடங்களில் காங்கிரஸ் ஜெயித்திருக்கும். ராகுல் காந்தி இந்த விஷயத்தை முன்னிறுத்தும்போது தமிழ்நாட்டில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு புரியவில்லை. குறிப்பாக அப்போதே தலைவராக இருந்த செல்வப் பெருந்தகையின் பார்வை வேறு பக்கமாக இருந்தது.

காங்கிரசையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. கரூர் துயரம் நடந்தபோது முதல் அழைப்பு ராகுல் காந்தியிடம் இருந்துதான் வந்தது. இந்த அன்பும் நட்பும் நம்பிக்கையும் அன்று முதல் தொடர்கிறது. இது அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி கிடையாது. புதுச்சேரி இடைத்தேர்தல் வெற்றி மூலம் இந்தியாவின் மிகப்பெரிய மாற்றம் உருவாகும். காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகிறது, எதிர்காலம் இருக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். தோற்றவர்கள் வெற்றி பெறுவார்கள், வெற்றி பெற்றவர்கள் வீழ்வார்கள் இதுதான் வரலாறு. திமுக ஜெயிக்கும் என உலகமே சொல்லும் போது தமிழ்நாட்டில் எந்த மீடியாவும் தமிழக வெற்றிக் கழகம் ஜெயிக்கும் என சொல்லவில்லை.

ராகுல் காந்திக்கு காங்கிரஸ் திமுக கூட்டணி பிடிக்கவில்லை. அதனால் ஸ்டாலினுடன் சேர்ந்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவில்லை. அவரின் அம்மா சோனியா காந்தி முடிவெடுத்ததால் இந்த கூட்டணி குறித்து எதுவும் பேசாமல் இருந்தார். இது பற்றி விஜயிடம் தெரிவித்த போது அவர் எதுவுமே தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என நான் உறுதியாக தெரிவித்தேன். சொன்னது போல தேர்தல் முடிவு வந்த இரண்டு நாட்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்தது. அதனால் இந்த கூட்டணி, நட்பு குறித்த பொய்களுக்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என பேசினார்.

Source: Read Full Article