CMRL MRTS MoU: சென்னை கடற்கரையில் இருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான ரயில்சேவையில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டிற்கு, 6 ஆயிரத்து 600 கோடி ரூபய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை ரயில் சேவை - விரைவில் புதிய ஒப்பந்தம்:

தமிழ்நாடு அரசானது மூன்று மாதங்களுக்குள் வெகுவிரைவுப் போக்குவரத்து அமைப்பை (MRTS) சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. விரைவில் மாநில அரசு சார்பில் ஒரு அரசாணை வெளியிடப்படும் எனவும், அதன் பிறகு மாநில அரசுக்கும், தெற்கு ரயில்வே அமைப்பிற்கும் இடையே புரிந்துணர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது. அதன் பிறகு வெளியிடப்பட உள்ள இரண்டாவது அரசாணையில், MRTS ரயில் நிலையங்களில் நிர்வாகத்தை கையிலெடுத்து அவற்றை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நடப்பாண்டின் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது.

திட்டத்தில் தாமதம் ஏன்?

ரயில் சேவையை மேம்படுத்துவதற்கான தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளது. அதேநேரம், பணி நீக்க தொகுப்புத் திட்டம் இறுதி செய்யப்பட வேண்டி இருப்பதால், ஆவணங்களில் கையெழுத்திடுவது தாமதமாகி உள்ளதாம். தயாரிக்கப்படும் திட்ட தொகுப்பானது நிலம் மற்றும் உட்கட்டமைப்பிற்கு ஈடாக தமிழ்நாடு அரசு தெற்கு ரயில்வே அமைப்பிற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களையும் உள்ளடக்கி இருக்குமாம். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதில் இரண்டு தரப்புக்கும் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

90 நாட்களில் கையகப்படுத்த அவகாசம்:

முன்னதாக இந்த திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கான ஆரம்பகட்ட ஒப்புதலை கடந்த ஆண்டு ஜுலை மாதம் ரயில்வே வாரியம் வழங்கியது. அதன் பிறகு பல கட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான அனுமதி கடந்த ஆகஸ்ட் மாதம் அளிக்கப்பட்டது. அதன்படி, ஒப்பந்தம் கையெழுத்தான 90 நாட்களில் MRTS கைவசம் உள்ள சொத்துகளின் நிர்வாகத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேம்பாட்டு பணிகளை முடிக்க வேண்டும். அதன் பிறகு இந்த கட்டமைப்பிற்கான முழு அதிகாரம் சென்னைமெட்ரோ ரயில் நிர்வாகத்திடமே இருக்கும்.

இதையும் படியுங்கள்: Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி

ரூ.6,600 கோடி திட்டம்:

இதற்கிடையில் சுமார் 6,600 கோடி ரூபாய் தேவைப்படும் இந்த 'MRTS புத்துயிர் அளிப்பு' திட்டத்தை மத்திய அரசின் திட்டமாக மேற்கொள்ளுமாறு மாநில அரசு இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியது. MRTS நிலையங்களைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தைச் செயல்படுத்த, மாநில அரசு கடன் பெறவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'MRTS புத்துயிர் அளிப்பு' திட்டம் என்றால் என்ன?

சென்னை கடற்கரை முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான 25 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்தி மேம்படுத்துவதே 'MRTS புத்துயிர் அளிப்பு' திட்டமாகும். இதன் வாயிலாக இந்த வழித்தடத்தில் உள்ள பாழடைந்த ரயில் நிலையங்களைப் புதுப்பித்தல், தொலைத்தொடர்பு மற்றும் இழுவை அமைப்புகளை மேம்படுத்துதல், தகவல் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு சமிக்ஞை முறையை நிறுவுதல் மற்றும் குளிரூட்டப்பட்ட அகலப் பாதை பெட்டிகளை அறிமுகப்படுத்துதல் போன்ற மேம்பாடுகள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

கடற்கரை டூ செயிண்ட் தாமஸ் மவுண்ட் முக்கியத்துவம்:

பேருந்துகள் அல்லது இலகுரகப் போக்குவரத்து வாகனங்களின் கொள்ளளவை விடப் பன்மடங்கு அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகளை இந்த ரயில் சேவை கையாள்கிறது. இதனால் சென்னை சாலையில் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் குறைகிறது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க புதிய மேம்பாட்டு வசதிகள் உதவும். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரயில் நிலையங்களின் தரமானது மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக மேம்படுத்தப்படும்.

அப்க்ரேடாகும் ரயில் நிலையங்கள்:

புதிய ஒப்பந்தத்தால் சென்னை கடற்கரை தொடங்கி செயிண்ட் தாமஸ் மவுண்ட் வழித்தடத்தில் உள்ள 21 ரயில் நிலையங்களின் தரம் மேம்படுத்தப்பட உள்ளன. நகரின் பெரும்பாலான பகுதிகளை இணைப்பதில் இந்த வழித்தடம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி,

சென்னை கடற்கரை

சென்னை கோட்டை

பார்க் டவுன்

சிந்தாதிரிப்பேட்டை

திருவல்லிக்கேணி

கலங்கரை விளக்கம்

முண்டக்கன்னி அம்மன் கோயில்

மயிலாப்பூர்

மந்தைவெளி

க்ரீன்வேஸ் சாலை

கோட்டூர்புரம்

கஸ்தூரிபாய் நகர்

இந்திரா நகர்

திருவான்மியூர்

தரமணி

பெருங்குடி

வேளச்சேரி

புழுதிவாக்கம்

ஆதம்பாக்கம்

செயிண்ட் தாமஸ் மவுண்ட்

Source: Read Full Article