TN Railway: தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களுக்கான சர்வே பணிகளை மேற்கொள்ள சுமார் 90 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள்:

தமிழ்நாட்டிற்கான பல்வேறு ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அதில் பல பல்வேறு சிக்கல்களால் முழுமை பெறாமல் ஆரம்ப நிலையில் முடங்கிக் கிடக்கின்றன. ரயில்வே துறையால் அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கும் போக்குவரத்து சர்வே, புல ஆய்வு சர்வே, ஆரம்பகட்ட சர்வே மற்றும் இறுதிகட்ட சர்வே என நான்கு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் 50 சர்வேக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வு பணிகளை முடிக்க சுமார் 97 கோடியே 18 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதுவரை 30 சதவிகித நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்து இருப்பதால், திட்டம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் பல ஆய்வுப் பணிகள் இதுவரை முடியாமல் உள்ளது.

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள்:

தமிழ்நாட்டிற்கு 42 திட்டங்கள், கேரளாவிற்கு 8 திட்டங்கள் என தெற்கு ரயில்வே மொத்தமாக தற்போது 50 திட்டங்களுக்கான சர்வே பணிகளில் ஈடுபட்டுள்ளது. மாநிலத்தை பொறுத்தவரை சென்னை - பெங்களூரு அதிவேக ரயில் பாதை, அரியலுார் - பெரம்பலுார் - நாமக்கல், கடலுார் - கடலுார் துறைமுகம், சோழவந்தான் - கருமாத்துார், திண்டிவனம் - சேதாரப்பேட்டை, திருவண்ணாமலை - திருப்பத்துார், செங்கல்பட்டு - மாமல்லபுரம், கள்ளக்குறிச்சி - உளுந்துார்பேட்டை, திண்டுக்கல் -சபரிமலை, ஜோலார்பேட்டை- கிருஷ்ணகிரி - ஓசூர், கள்ளக்குறிச்சி -திருவண்ணாமலை 69 கி.மீ புதிய பாதை திட்டம் உட்பட, பல்வேறு புதிய ரயில் பாதை திட்டப் பணிகளுக்கான சர்வே பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளன. இதற்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததே காரணமாக கூறப்படுகிறது. உரிய நிதி கிடைக்கப்பெற்றால் மட்டுமே மாநிலத்தில் ரயில் போக்குவரத்துக்கான கட்டமைப்பை மேம்படுத்த முடியும் துறை சார் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: kia SUV: உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்

சர்வே பணிக்கு ஒதுக்கப்படாத நிதி

இதுதொடர்பாக பேசும் ரயில்வே துறை அதிகாரிகள், “தெற்கு ரயில்வேயில் பல்வேறு புதிய மற்றும் அகல ரயில்வே பாதைகள் அமைப்பதற்கான, சர்வே பணிகளை மேற்கொள்ள, 97.18 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தமிழகத்தில் நடக்கும் 13 புதிய பாதைகளுக்கு மட்டும் 26.92 கோடி ரூபாய் தேவை. ஆனால், சர்வேக்களுக்கு மொத்த தொகையில், 30 சதவிகிதம் வரை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போதிய நிதி இல்லாததால், பெரும்பாலான சர்வேக்கள் 10 ஆண்டுகளாக நடக்கின்றன. இதனால், அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளிலும் தாமதம் ஏற்படுகின்றன. எனவே, சர்வே பணிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தாமதமின்றி வழங்க வேண்டும். அதுபோல, சர்வே முடிக்க கால நிர்ணயத்தை, ரயில்வே வரையறுக்க வேண்டும், மேலும், சர்வே செலவினங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் ரயில்வேதுறை இனியும் தாமதிக்காமல் தேவையான நிதியை விடுவித்து, சர்வே பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்வதோடு, அடுத்த கட்ட பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Source: Read Full Article