தமிழ்நாட்டில் பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் அரிசி விலை உயர்ந்துள்ளது. அதேசமயம் பருப்பு மற்றும் எண்ணெய் விலை வரும் நாட்களில் மிகப்பெரிய அளவில் உயர்வை சந்திக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனைக்குள்ளாகும் பண்டிகை காலம்

இந்தியாவைப் பொறுத்தவரை அக்டோபர் முதல் ஜனவரி மாதம் பண்டிகை காலமாக பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் பல்வேறு மதம் சார்ந்த பண்டிகைகள், விசேஷ தினங்கள் வரும். அப்படியான நிலையில் சிறப்பு உணவுகள், பலகாரங்கள் என பலவகையும் செய்யப்படுவது வழக்கம். இதன் காரணமாக பண்டிகை காலங்களில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றிற்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதேசமயம் இவற்றின் விலைவாசியும் விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.

அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்வு

இந்த நிலையில் நடப்பாண்டு அரிசி விலை கடந்த 3 மாதங்களில் 3 முறை உயர்ந்து விட்டது. ஆரம்பத்தில் கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை முதலில் உயர்ந்த விலை, தற்போது ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அரிசியைப் பொறுத்தவரை பல ரகங்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும் அனைத்துமே விலை உயர்வை சந்தித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 11ம் தேதி முதல் நவராத்திரி கொண்டாட்டம் தொடங்கும் நிலையில் இந்த விலை அதிகரிப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பருவமழை பொய்ப்பு, விளைச்சல் குறைவு, இடுபொருட்கள் விலை அதிகரிப்பு என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதேசமயம் பலகாரங்கள் செய்ய மத்திய அரசு சமையல் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரியை சமீபத்தில் குறைத்தது. இதன் காரணமாக சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பண்டிகை கால தேவை அதிகரிப்பால் இவற்றின் விலை உயரவே வாய்ப்பு அதிகம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் லிட்டருக்கு ரூ.365 என்பதிலிருந்து ரூ.410 ஆக நல்லெண்ணெய் விலை உயர்ந்த நிலையில், சூரிய காந்தி எண்ணெய் விலை ரூ.165ல் இருந்து ரூ.190 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் பாமாயில் விலை அதிகரிக்கவுள்ளது.

மேலும் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சராசரியாக இவற்றின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நகரங்களைப் பொறுத்து இவற்றின் விலை மாற்றங்கள் பெறுகிறது.

தற்சமயம் ஒவ்வொரு பொருட்களாக மாற்றம் கண்டு வருகிறது. பழைய சரக்குகள் அனைத்தையும் காலி செய்து விட்டு பண்டிகை காலங்களுக்கு புதிய சரக்குகள் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் முழுமையாக உணவுப்பொருட்கள் விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article