தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்று இடைத்தேர்தல்:

இதன்படி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. ஆளுங்கட்சியான தவெக-வைப் பொறுத்தமட்டில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த இடைத்தேர்தல் அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

600 வாக்குச்சாவடிகள்:

தாராபுரம் தொகுதியைப் பொறுத்தமட்டில் மொத்தம் 320 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தமட்டில் 280 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதியிலும் மொத்தம் 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 600 வாக்குச்சாவடியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு மட்டுமின்றி கண்காணிப்பு கேமரா மூலமாகவும் இந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது.

5 முனைப் போட்டி:

மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி என்று கருதப்படும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தமட்டில் ஆளுங்கட்சியான தவெக - எதிர்க்கட்சியான திமுக - முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக - நாம் தமிழர் - இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி நிலவி வருகிறது.

வேட்பாளர்கள் யார்? யார்?

தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக இந்த இடைத்தேர்தலில் தனது வேட்பாளர்களாக தவெக சார்பில் பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுக-வில் இருந்து தவெக-வில் இணைந்த மரகதம் குமரவேலை மதுராந்தகம் தொகுதியிலும், சத்தியபாமாவை தாராபுரம் தொகுதியிலும் வேட்பாளர்களாக இறக்கியுள்ளது.

திமுக சார்பில் வேட்பாளராக மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

6 மணிக்கு நிறைவு:

மதுராந்தகத்தில் மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக்கு தொடர்பில்லாதவர்களை காவல்துறையினர் ஏற்கனவே அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும், விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருப்பவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

முடிவு எப்போது?

இந்த இடைத்தேர்தலுக்காக தவெக-விற்காக முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்த நிலையில், திமுக-விற்காக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக-விற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுகள் வரும் 9ம் தேதி வெளியாகிறது.

ஆளுங்கட்சிக்கு முதல் இடைத்தேர்தல்:

இந்த இடைத்தேர்தலின் முடிவு என்பது தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களின் அரசியல் களத்தை தீர்மானிக்கும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதியிலும் கிராமந்தோறும் சென்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற பிறகு 3 மாதங்களிலே தவெக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதாலும் இந்த இடைத்தேர்தல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்தி அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி அளிக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.

Source: Read Full Article