தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள புதிய 1,600 மெகாவாட் நிலக்கரி மின் நிலையத்தின் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரங்களுடன் ஒப்பிடுகையில் விலை உயர்ந்ததாக இருக்கும் என Climate Risk Horizon மேற்கொண்ட ஆயவில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய தூத்துக்குடியில் இரண்டு புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ஆகஸ்ட் 31ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். மின்கட்டணச் செலவுகள் உயர்ந்து வரும் நிலையிலும், மாநில மின்துறையின் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ள நிலையிலும், புதிய நிலக்கரி மின் நிலையங்களை அமைப்பது மின்சாரத்தின் விலையை மேலும் உயர்த்தும் என்று கிளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் (CRH) நடத்திய புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தால் என்ன பிரச்னை ?

தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள 2x800 மெகாவாட் மிக உய்ய அனல்மின் நிலையத்தின் மின்சாரம், 8 மணி நேர பேட்டரி சேமிப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்சாரத்தை (Solar PV) விட ஏறக்குறைய இருமடங்கு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று CRH-இன் மதிப்பீடுகள் காட்டுகின்றன.

ஆய்வின்படி, ஆலையின் செயல்பாட்டு அளவைப் (plant utilisation) பொறுத்து, புதிய அனல்மின் நிலையங்களின் மின்சார உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.8.75 முதல் ரூ.10.4 வரை இருக்கும். இதற்கு மாறாக, அதே அளவு மின் உற்பத்தியை 8 மணி நேர பேட்டரி சேமிப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் பெற்றால், ஒரு யூனிட்டுக்கு ரூ.5 மட்டுமே செலவாகும். சூரிய மின்னாற்றல் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 18 மணி நேரத்தைப் பூர்த்தி செய்யும். குறைந்த மின்சாரத் தேவை உள்ள மீதமுள்ள 6 மணி நேரத்தை, ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் ஈடுசெய்யலாம்.

முன்மொழியப்பட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டால், செயல்பாட்டுக்கு வரும் முதல் ஆண்டில் ரூ.4,120 கோடியும், முதல் ஐந்து ஆண்டுகளில் ஏறக்குறைய ரூ.20,000 கோடியும் நிலையான செலவுகளாக (fixed costs) செலுத்தும் கட்டாயத்தில் TNPDCL சிக்கிக்கொள்ளும். புதிய நிலக்கரி மின் நிலையங்களால் ஏற்படும் இந்த ஆண்டுதோறும் நிதிச்சுமை கணிசமானது; மாநில மின் விநியோக அமைப்பு எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களுக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

வளர்ந்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய நிதி அடிப்படை யில் சிறந்த மாற்றுகள்:

திட்டமிடப்பட்டுள்ள 1,600 மெகாவாட் நிலக்கரி மின்சாரத்திற்குப் பதிலாக, 9,067 MWh BESS-உடன் கூடிய 3,490 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தலாம். இதற்கு மொத்த மூலதனச் செலவு (CapEx) ரூ.27,289 கோடி தேவைப்படும். தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள 1,600 மெகாவாட் நிலக்கரி மின் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள மூலதனச் செலவு ரூ.20,800 கோடி. சூரிய ஒளி + BESS திட்டத்திற்கு ஆகும் கூடுதல் மூலதனச் செலவு (ரூ.6,489 கோடி), புதிய நிலக்கரி மின் நிலையத்தோடு ஒப்பிடுகையில் குறைவான மின்சார விலையால் கிடைக்கும் சேமிப்பின் மூலம் இரண்டாவது ஆண்டிலேயே இந்த 6,489 கோடியை ஈடுசெய்யலாம். ஒட்டுமொத்தப் பார்த்தால் சூரிய ஒளி + BESS-ஐத் தேர்ந்தெடுப்பது மாநில கருவூலத்திற்கும் சாதாரண நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க சேமிப்பை அளிக்கும். மதிப்பீடுகளின்படி, சூரிய ஒளி + BESS மூலம் கிடைக்கும் குறைந்த மின் செலவு, பயன்பாட்டு அளவைப் பொறுத்து, முதல் ஆண்டிலேயே தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.3,372 கோடியை மிச்சப்படுத்த உதவும்.நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய ஒன்றிய எரிசக்தி அமைச்சகத்தின் (Viability Gap Funding - VGF) திட்டத்தை BESS நிறுவலுக்கு ஆதரவாக தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 1,500 MWh BESS ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய நிலக்கரி மின் நிலையங்களுக்குப் பதிலாக தூய்மையான புதுப்பிக்கத்த மின்சார உற்பத்தி முறையைப் பயன்படுத்துவது, ஏற்கனவே தொழிற்சாலைக் காற்று மாசு மற்றும் கழிவுகளால் பொதுமக்களின் கடும் எதிர்ப்பைக் கண்டுள்ள தூத்துக்குடிப் பகுதியில் மாசுபாட்டையும் தடுக்கும்.

"தமிழ்நாடு இருக்கும் பொருளாதாரச் சூழலையும், சூரிய ஒளி மின்சாரம் மற்றும் பேட்டரி சேமிப்பின் தெளிவான நிதி நன்மைகளையும் கருத்தில் கொண்டால், மின்தேவை அதிகரிப்பைப் பூர்த்தி செய்ய புதிய நிலக்கரி மின் நிலையங்களைக் கட்டுவது பொருளாதார அடிப்படையில் எந்த அர்த்தமும் இல்லாதது. மாநிலத்தின் குறைந்த நிதி ஆதாரங்களை, பேட்டரி சேமிப்புடன் இணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கப் பயன்படுத்துவதே சிறந்தது" என்று கிளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் இயக்குநரும் ஆய்வின் இணை ஆசிரியருமான ஆஷிஷ் பெர்னாண்டஸ் கூறினார்.

அட்டவணை 1: புதிய நிலக்கரி மற்றும் பேட்டரி சேமிப்புடன் கூடிய சூரிய ஒளி மின்சாரம் – ஒப்பீடு

மூலதனச் செலவு (ரூ. கோடி)

கட்டணம் (ரூ./kWh)

எரிபொருள் செலவு (ரூ./kWh/ஆண்டு)

5 ஆண்டு ஒட்டுமொத்த மின் செலவு (ரூ. கோடி)

10 ஆண்டு ஒட்டுமொத்த மின் செலவு (ரூ. கோடி)

கட்டுமானக் காலம்

2 x 800 மெகாவாட் நிலக்கரி

20,800

8.75 - 10.4

4.13

33,965

66,887

5-7 ஆண்டுகள்

3,490 மெகாவாட் சூரிய ஒளி + 9,067 MWh BESS

27,289

5

0

17,581

35,162

2-3 ஆண்டுகள்

ஒட்டுமொத்த சேமிப்பு (ரூ. கோடி)

16,384

31,725

படம் 1: நிலக்கரியுடன் ஒப்பிடுகையில், சூரிய ஒளி + பேட்டரி சேமிப்பு குறைந்த, உயராத ஆண்டுதோறும் மின் உற்பத்திச் செலவை வழங்குகிறது

Source: Read Full Article