வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் ருத்தரதாண்டவம் ஆடி வருகின்றது. இதனால் காய்ந்து போயிருந்த ஏரி, குளங்கள் மற்றும் கிணறு போன்ற நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த அர்னாப் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க செல்லக்கூடாது

இந்த புயலானது ஆந்திராவின் பாபட்லா- விசாகப்பட்டினம் இடையே அதி தீவிர புயலாக சுமார் 140 கி.மீ. வேகத்தில் அக்டோபர் 28ம் தேதி புயல் கரையை கடக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அர்னாப் புயலால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலுக்கு சென்ற மீனவரகள் உடனடியாக கரைதிரும்ப வேண்டும். மறு உத்தரவு வரும் வரை யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மழை

இதனிடையே அடுத்த 3 மணிநேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும் என டெல்டா வெதர்மேன்
தெரிவித்துள்ளார்.

அர்னாப் புயல்

இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மத்தியகிழக்கு வங்ககடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணியளவில் புயலாக மாறியது. புயலிற்கு வங்கதேசம் பரிந்துரைத்த அர்னாப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. "அர்னாப்" புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிரப்புயலாக மாறி அக்டோபர் 28 முற்பகல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் பாப்பட்லா இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கும்.

இதையும் படிங்க: Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்

வறண்ட வானிலை

அர்னாப் கரையை கடக்கும் போது ஆந்திர கடலோர பகுதிகளில் அதித கனமழையும், 140 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றும் வீசக்கூடும். இப்புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. மீனவர்கள் அக்டோபர் 29ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச்செல்வதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு & புதுச்சேரியில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும் நாளை முதல் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article