விசிகவை குறிவைக்கும் நோக்கில் தான் தவெக கூட்டணியில் பாமக இடம்பெற போவதாக திட்டமிட்டு பரப்பப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அக்டோபர் 6ல் நடக்கவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்து விட்டது. அதேசமயம் வன்னியர் சமூக மக்கள் அதிகம் கொண்ட மதுராந்தகம் தொகுதியில் மறைமுகமாக தவெகவுக்கு பாமக ஆதரவளிப்பதாக தகவல் வெளியானது. மேலும் தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறும் என வெளியான செய்தியை அக்கட்சி எம்.எல்.ஏ.வான சௌமியா மறுத்தார். இந்த நிலையில் திட்டமிட்டு தவெக கூட்டணியில் பாமக இடம்பெறுவதாக பரப்பப்படுகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “மதுராந்தகத்தில் நாம் ஆதரிக்கும் வேட்பாளர் மரகதம் குமரவேலின் வெற்றி உறுதியாகி விட்டது. இதனை நம்முடைய வளர்ச்சியை விரும்பாத சக்திகள் இணையத்தில் வதந்திகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள். அதாவது பாஜகவும், பாமக அணியில் ஒருபோதும் விசிக இடம்பெறாது 15 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லி வருகிறேன். அப்படியிருக்கும்போது அந்த நிலைப்பாட்டை ஒரு வாய்ப்பாக கருதி தவெக கூட்டணியில் பாமக இடம்பெற போகிறது என்கிற வதந்தியை திட்டமிட்டு பரப்புகிறார்கள். அதனால் தான் பாமக இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வழங்க வேண்டிய ஆதரவை வழங்காமல் நடுநிலை வகிப்பதாக கூறியிருக்கிறார்கள். உண்மையில் தவெகவுக்கு தான் பாமக ஆதரவு கொடுக்க இருக்கிறார்கள்.

இடைத்தேர்தல் முடிந்ததும் தவெக கூட்டணியில் பாமக இடம்பெற்று அமைச்சரவையில் பங்கு பெறும். துணை முதல்வர் பதவி கொடுக்கப் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகளைப் பரப்புகிறார்கள். இப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டால் விசிக பின்வாங்கி விடுவார்கள். தேர்தல் களத்தில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். தவெக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க மாட்டார்கள். இதன்மூலம் தவெகவுக்கு விசிக ஆதரவு முழுமையாக கிடைக்காமல் தடுக்க வேண்டும். குழப்பத்தை ஏற்படுத்துவதால் விசிக வாக்குகள் முழுமையாக செல்லாமல் தடுக்க முடியும் என வதந்திகளைப் பரப்புகிறார்கள்.

தவெக தொடக்கத்தில் இருந்தே விசிக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியோரின் ஆதரவை பெறுவதில் தான் பெரும் முயற்சியை எடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்போது விசிகவை தடுக்கும் நோக்கி தவெக - பாமக கூட்டணி பேச்சு என்ற தகவல் பரப்பப்பட்டது. எந்த அணியிலும் விசிக இடம்பெற விடாமல் தடுக்கும் நோக்கி உள்நோக்கத்துடன் அந்த வதந்தி வெளியானது. விசிக ஒரு முடிவை எடுத்து அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதுபோன்ற வதந்திகள் எப்போது, எந்த மூலையில் இருந்து வந்தாலும் அதனை விசிக தொண்டர்கள் பொருட்படுத்த தேவையில்லை. தவெக - விசிக அரசியல் உறவு வரலாற்று கட்டாயமாக மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article