மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு டெட் தேர்வு

இந்த தேர்வு கடந்த ஜூலை 4, 5-ம் தேதிகளில் தாள்-1, தாள்-2 தேர்வு நடத்தப்பட்டது. இந்த 2 தேர்வுகளையும் சேர்த்து 2,17,519 ஆசிரியர்கள் எழுதினர். இதில் 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 1,09 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1 தேர்வில் தேர்ச்சி விகிதம் 80 சதவீதமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் 38 சதவீதமாகவும் பதிவானது. இந்நிலையில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நலனுக்காக வரும் டிசம்பர் மாதம் மீண்டும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஆசிரியர் தேர்வு வாரியம்

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தற்போது சிறப்பு ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை வருகின்ற டிசம்பர் 2026ம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், இத்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

பயிற்சி நடைபெறும் இடம்

எனவே, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் 2026-இல் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வினை (Special TET) எதிர்கொள்ளும் வகையில் நேரடிப் பயிற்சியாக வழங்கவேண்டியுள்ளது. இப்பயிற்சியினை நேரடி பயிற்சியாக கீழ்க்கண்டவாறு பள்ளிப் பணிகள் பாதிக்காவண்ணம் ஆசிரியர்களின் வசதிக்கேற்றவாறு சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை நாள்களில் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படவுள்ளது.

வார விடுமுறைகள் நாட்கள்

இந்த பயிற்சி வருகிற 31-ம் தேதி முதல் அடுத்த மாதம் நவம்பர் 1, 7, 8, 14, 15, 21, 22, 28, 29, டிசம்பர் மாதம் 5, 6, 12, 13ம் தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பங்கேற்க உரிய அறிவுரைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இப்பயிற்சி முடிவுற்ற பின்னர் அறிக்கை விவரத்துடன் இந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Source: Read Full Article