Ambasamudram ByPoll 2026: தமிழ்நாட்டில் இன்னும் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று கருதப்படுகிறது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக அபார வெற்றி பெற்றது.

பொது வேட்பாளர் சீமான்:

இந்த நிலையில், 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்க்கமாக உள்ளது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சீமானுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக முடிவு செய்யும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக களமிறங்க இருப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. அதிமுக ஆதரவு கிடைத்தால் சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஆனால், சீமானை பொதுவேட்பாளராக களமிறக்குவதில் என்னென்ன சவால்கள் உள்ளன? என்பதை கீழே காணலாம்.

1. திராவிட கட்சிகள் ஆதரவா?

திராவிடத்திற்கு எதிராகவும், திராவிட கட்சிகளுக்கு எதிராகவும் தோன்றிய கட்சி நாம் தமிழர். திமுக-வை மிக கடுமையாக விமர்சித்து தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. தமிழ் தேசியத்தை முன்னெடுத்து திராவிடத்தை மிக கடுமையாக எதிர்த்ததாலும், இலங்கை இறுதிப்போரில் திமுக-வின் செயல்பாடுகளை விமர்சித்துமே தமிழ்நாட்டில் நாம் தமிழர் தனக்கென மிகப்பெரிய வாக்கு வங்கியை உருவாக்கியது.

திராவிடம் மற்றும் திமுக-வை தனது எதிரியாக கொண்டு உருவான நாம் தமிழர் தற்போது தேர்தலுக்காக திராவிட கட்சிகளின் ஆதரவுடன் களத்தில் இறங்கினால் சீமானுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகும் வாய்ப்புகள் பிரகாசம். எதிர்காலத்தில் நாம் தமிழர் திமுக-வுடன் கூட்டணி வாய்ப்பதற்கான அடித்தளமாகவும் இது மாறும். அவ்வாறு அரங்கேறினால் சீமானின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் சரிவதுடன், நாம் தமிழர் வாக்கு வங்கியும் மிகப்பெரிய அளவில் சரியும்.

2. திமுக - அதிமுக மறைமுக கூட்டணியா?

அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்றால் திமுக ஆதரவு அளிப்பது மட்டுமின்றி அதிமுக ஆதரவு அளிப்பதும் அவசியமாகும். அவ்வாறு திமுக - அதிமுக ஆதரவுடன் சீமான் களமிறங்கினால் தவெக-விற்கு அது சவாலாக மாறும். ஆனால், அதுவே திமுக - அதிமுக-விற்கு பின்னடைவாகவும் மாறும்.

ஏனென்றால், தனிப்பெரும்பான்மை இல்லாமல் தவெக தவித்தபோது திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டினர். அந்த குற்றச்சாட்டிற்கு அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் மறுப்புத் தெரிவித்த நிலையில், சீமானுக்கு இரு கட்சியினரும் ஆதரவு அளித்தால் அவர்களின் மறைமுக கூட்டணி உறுதி செய்யப்படும்.

3. அதளபாதாளத்திற்கு செல்லும் இபிஎஸ் செல்வாக்கு:

அம்பையில் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு சீமானுக்கு ஆதரவு அளித்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது அதிமுக-வே ஆகும். ஏனென்றால், இந்த தொகுதி அதிமுக-விடம் இருந்து பறிபோன தொகுதியாகும். இந்த தொகுதியை மீண்டும் அதிமுக கைப்பற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும் சூழலில், தாங்கள் பறிகொடுத்த தொகுதிக்கு மற்றொரு கட்சியைச் சேர்ந்தவருக்கு ஆதரவு அளிப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை உண்டாக்கும்.

இதைக்காட்டிலும் தேர்தலுக்கு முன்பு திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்தாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திமுக ஆதரவுடன் களமிறங்கும் சீமான் களமிறங்கி, அதற்கு அதிமுக ஆதரவு அளித்தால் யாருக்கு எதிராக எம்ஜிஆர் கட்சி தொடங்கினாராே? ஜெயலலிதா யாரை எதிரியாக கொண்டு கட்சியை நடத்தினாரோ? அவர்களுடன் அதிமுக கை கோர்ப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் துளியளவும் ஏற்கமாட்டார்கள். இது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்தியை கட்சியில் உண்டாக்கும். இதனால், அவருக்கு மிகப்பெரிய நெருக்கடி உண்டாகும்.

4. பலம் பெறும் தவெக:

திமுக - அதிமுக ஆதரவுடன் சீமான் களமிறங்கினால் அது தவெக-்றகு ஒரு பக்கம் நெருக்கடி அளிப்பது போல தோன்றினாலும், அதையே தங்கள் துருப்புச்சீட்டாக விஜய் மாற்றுவதற்கு வாய்ப்புகள் மிக பிரகாசம். மேலே கூறிய அதிமுக - திமுக கூட்டணி, திராவிட கட்சிகள் பக்கம் சாய்ந்த சீமான் ஆகிய விஷயங்களை பிரதானமாக தனக்கு ஆதரவாக விஜய் பரப்புரையில் பயன்படுத்துவார். விஜய்யின் அந்த துருப்புச்சீட்டு அவருக்கு ஆதரவாக முடிந்தால் திமுக-வைக் காட்டிலும் அதிமுக, நாம் தமிழருக்கு மிகப்பெரிய பின்னடைவை அது உண்டாக்கும்.

Source: Read Full Article