இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சண்டிகரில் நடந்து வருகிறது. முதல் இரு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ரோகித் சர்மா - ருதுராஜ்:

முதல் போட்டியில் சதமும், கடந்த போட்டியில் இரட்டை சதமும் விளாசிய சுப்மன்கில் இந்த போட்டியில் 1 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய விராட் கோலி முதல் பந்திலே போல்டானார். 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தபோது ரோகித் சர்மா - ருதுராஜ் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக ஆட ரோகித் சர்மா பின்னர் தனது அதிரடியைக் காட்டினார். ருதுராஜ் கெய்க்வாட் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக நிதானமாகவே ஆட, ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார்.

92 ரன்களில் அவுட்:

இதனால், இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா அதிரடியாக அரைசதம் கடந்தார். சீல்ஸ், ஃபோர்ட், அல்சாரி ஜோசப், மோதி, கீமோ பால் என அனைவரது பந்துவீச்சையும் விளாசினார்.

சிறப்பாக ஆடி சதத்தை நோக்கி ரோகித் சர்மா நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அவரை கீமோ பால் அவுட்டாக்கினார். அவரது பந்தில் அவர் சிக்ஸருக்கு விளாச முயற்சித்த பந்தை ஜுவல் ஆண்ட்ரூ கேட்ச் பிடித்தார். இதனால், ரோகித் சர்மா 85 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 92 ரன்களுக்கு அவுட்டானார். இதனால், 8 ரன்களில் அவர் சதம் விளாசும் வாய்ப்பு நழுவியது.

விமர்சனங்களுக்கு பதிலடி:

ரோகித் சர்மாவின் உடல் தகுதி பற்றியும், அவரது பேட்டிங் திறன் பற்றியும் விமர்சனம் செய்து வந்தவர்களுக்கு ரோகித் சர்மா தனது பேட்டிங் மூலமாக பதிலடி அளித்து வருகிறார். அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பையை குறிவைத்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடி வரும் நிலையில், ரோகித் சர்மாவின் பேட்டிங் அவர் அணிக்கு எந்தளவு முக்கியம் என்பதை நிரூபித்துள்ளது. விராட் கோலி இந்த போட்டியில் டக் அவுட்டானாலும் முதல் போட்டியில் அபார சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டும் ரோகித் சர்மா இதுவரை 4 சதங்களையும், 13 அரைசதங்களையும் ஒருநாள் போட்டிகளில் விளாசியுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டியில் மட்டும் பெரியளவு ரன்களை விளாசாத ரோகித் சர்மா அடுத்தடுத்த இரு போட்டியிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களுக்கு அவுட்டாக, கே.எல்.ராகுல் - நிதிஷ் ஜோடி தற்போது ஆடி வருகிறது.

Source: Read Full Article