ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கிணங்க, சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும் பூண்டி ஏரியின் முகத்துவாரத்தை தூர் வாரும் பணி ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு செய்ய, பெரும் முயற்சி நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் உதவியாளர் பெயரை பயன்படுத்தி முறைகேடு ?

பூண்டி ஏரியின் முகத்துவராத்தில் தேங்கும் மணலை அகற்ற, அதனை சேறு என கணக்கிட்டு, ரெவன்யூ மாடல் வடிவிலான டெண்டரை போட்டு, அதனை ஒரு குறிப்பிட்ட நபருக்கு தாரை வார்க்க, நீர்வளத்துறையின் கொசஸ்தலை ஆறு மண்டல செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணா தன்னிச்சையாக முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக முதலமைச்சர் விஜயின் உதவியாளர் ஜெகதீஸ் பழனிசாமி பெயரையே அவர் பயன்படுத்துவதாகவும் பகீர் கிளப்புகிறார்கள் நீர்வளத்துறை அதிகாரிகள்.

அரசின் ஒப்புதல் இன்றி சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற்ற செயற்பொறியாளர்

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில், திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி கிராமத்தில் 4.90.5 ஹெக்டேர் பரப்பளவில், ஒரு மீட்டர் ஆழத்திற்கு 49,001 கன மீட்டர் Ordinary Earth அகற்றும் திட்டம் தற்போது மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. Phase-2, Spell-5 எனக் குறிப்பிடப்படும் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு SEIAA சார்பில் 13.06.2025 அன்று Environmental Clearance வழங்கப்பட்டுள்ளதாகத் திட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்படியான ஒரு திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டியது நீர்வளத்துறையின் செயலாளர்தான். ஆனால், ஒரு சாதாரண செயற்பொறியாளரான ராதாகிருஷ்ணாவே, உயர் அதிகாரிகளின் ஒப்புதல் ஏதுவுமின்றி நேரடியாக SEIAAக்கு விண்ணப்பித்து, சுற்றுச்சூழல் அனுமதியையும் இந்த திட்டத்திற்கு பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெற வாய்ப்பிருப்பதாகவும், இதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும் பரபரக்கின்றனர் நீர்வளத்துறையினர்.

ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு பதில் புதிய ஒப்பந்தம் ?

பூண்டி நீர் தேக்கத்தில் இதே Revenue Generation Model அடிப்படையில் ‘திருமலா ஏஜென்சி’ பெயரில் நீண்டகால ஒப்பந்தம் இருந்ததாகவும், ஆனால், அந்த நிறுவனம் மீது எழுந்த புகார்கள், வழக்குகளால் அந்த பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திமுக நிர்வாகிக்கு டெண்டர் கொடுக்க முயற்சி ?

இந்நிலையில், சுந்தரி ஏஜென்ஸி’ என்ற பெயரில் செயல்படும் ஒரு நிறுவனத்திற்கு இந்த முகத்துவாரத்தில் உள்ள மணலை எடுப்பதற்கான அனுமதியை தர செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணா உள்ளிட்டோர் தீவிரமாக முயற்சிப்பதாகவும், அந்த சுந்தரி ஏஜென்ஸியின் உரிமையாளர் ராஜேந்திரகுமார் என்ற திமுக நிர்வாகி என்றும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதே நேரத்தில் முறையான டெண்டர் அறிவிப்பும் இன்றியும், விதிகளை பின்பற்றாமலும் இருப்பதால் இந்த பணிகளை சுந்தரி ஏஜென்ஸி என்ற திமுக ஆதரவு நிறுவனத்திற்கு ஒதுக்குவதற்கு உயர் அதிகாரிகள் தயங்கிய நிலையில், முதலமைச்சர் விஜயின் உதவியாளர் ஜெகதீஸ் பழனிசாமி பெயரை பயன்படுத்தி, இந்த டெண்டரை சுந்தரி ஏஜென்ஸிஸ்க்கு கொடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பெரும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதனை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணாவே முன்னின்று நடத்துவதாகவும், தான் டெண்டர் கொடுக்க மறுப்பதாக திசை திருப்பிவிட்டு, முதல்வரின் உதவியாளர் பெயரை வைத்து, உயர் அதிகாரிகளை மிரட்டி, தன்னுடைய விருப்பமான சுந்தரி ஏஜென்ஸிஸ் நிறுவனத்திற்கு பணிகளை பெற்றுத் தர அவர் இப்படி சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் துறையை சார்ந்தவர்களே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்கள்.

விளக்கம் அளிக்க மறுத்த துறை செயலாளர் பிரசாந்த வடநரே

இந்த விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறையின் செயலாளர் பிரசாந்த வடநரேவே வாட்ஸ் அப் வழியாக தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். ஆனால், அவர் நாம் எழுப்பிய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் கிட்டத்தட்ட 24 மணி நேரம் ஆகியும் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் நடைபெறவிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றத்தில் அவரும் மாற்றப்படவிருக்கும் சூழல் இருப்பதால், எதற்கும் பதிலளிக்காமல் இருந்துவிடலாம் என்று கூட அவர் பதிலளிக்காமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரங்கள்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த தலையிட வலியுறுத்தல்

ஆனால், இந்த முறைகேடு நடக்கவிருப்பது சென்னைக்கே முக்கியமான பூண்டி ஏரி என்பதால், இதில் கூட கவனம் செலுத்தாமல் அவர் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதனால், இந்த விவகாரத்தில் துறையின் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தலையிட்டு விதிகளை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Source: Read Full Article