OMR ECR Link Road: பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (OMR) கிழக்கு கடற்கரை சாலை(ECR) வரையிலான புதிய இணைப்பு பாதைக்கு, விரிவான திட்ட அறிக்கையை 3 மாதங்களில் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

OMR தொடங்கி ECR வரையிலான இணைப்பு பாதை:

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் தொடங்கி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் வரையில், இணைப்பு சாலையை அமைக்க விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சோழிங்கநல்லூர் சந்திப்பு பகுதிக்கு தீர்வு கிடைப்பதோடு, இரண்டு சாலைகளுக்கு இடையேயான இணைப்பு மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு..!

முன்மொழியப்பட்டுள்ள இணைப்புச் சாலையானது சோழிங்கநல்லூர், சிறுசேரி மற்றும் கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து கோவளம் மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்வோருக்கான இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் வாகன ஓட்டிகள் OMR மற்றும் ECR சாலைகளுக்கு இடையே குறைவான இணைப்பு வசதியையே கொண்டுள்ளனர். இதுபோக சுற்றிவரவேண்டிய துரைப்பாக்கம் நீலாங்கரை சாலையையு சில சமயங்களில் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

10 நிமிடங்களே போதும்..!

புதிய இணைப்புச் சாலையானது பழைய மகாபலிபுரம் (OMR) மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு இடையேயான பயண நேரத்தை வெறும் 10 நிமிடங்களாக குறைக்கும் என கூறப்படுகிறது. கூடுதலாக இந்த சாலையானது OMR சாலையின் ஓரத்தில் வேகமாக வளர்ந்து வரும் பல குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பான சோழிங்கநல்லூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலையும் தணிக்க உதவும் என அரசு தரப்பு எதிர்பார்க்கிறது. மாமல்லபுரம் வரை இணையாக நீளும் இந்த இரண்டு சாலைகளில் ஒரு நாளைக்கு சுமார் இரண்டு லட்சம் வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப வழித்தடமான ஓஎம்ஆர் சாலையில் ஒரு இணைப்பு ஏற்படுத்தினால், போக்குவரத்து நெரிசல் குறையும். கிழக்கு கடற்கரைச் சாலையின் நகர்ப்புறப் பகுதியில் போக்குவரத்து குறைவாக இருப்பதால், ஓஎம்ஆரிலிருந்து நகரத்தை நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்த இணைப்பு உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி

3 மாதங்கள் அவகாசம்..!

ரூ.14.20 லட்சம் மதிப்பிலான இந்த டெண்டரை எடுக்கும் நிறுவனமானது 3 மாத கால அவகாசத்திற்குள் விரிவான திட்ட அறிக்கையை தயார்படுத்த வேண்டும். அதில் பரிந்துரைக்கப்படும் வழித்தடம், பொறியியல் வடிவமைப்புகள், நிலம் கையகப்படுத்தும் திட்டங்கள், வகைப்படுத்தப்பட்ட போக்குவரத்து அளவு, தொடக்க மற்றும் இறுதி புள்ளி மற்றும் செலவு மதிப்பீடுகள் ஆகியவை உள்ளடங்கும். அவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.

தாமதமாகும் இணைப்பு சாலை பணிகள்:

இதுமட்டுமின்றி தனியாக, பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையை, ஓஎம்ஆர் சந்திப்பில் இருந்து நீலாங்கரையில் உள்ள ECR உடன் இணைக்கும் 1.465 கி.மீ நீளமுள்ள இணைப்புச் சாலையை நெடுஞ்சாலைத்துறை முன்னெடுத்துள்ளது. 30.5 மீட்டர் அகலத்துடன் கூடிய இந்த ஆறு வழிச் சாலை, இரண்டு முக்கிய சாலைகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தி, தென் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OMR முனையிலிருந்து 860 மீட்டர் நீளத்திற்கான பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன. ECR நோக்கிய மீதமுள்ள பகுதிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே 36 மீட்டர் நீளமுள்ள ஒரு உயர் மட்ட எஃகுப் பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அதன் கட்டுமானப் பணிகளுக்காக ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

Source: Read Full Article