இன்று திருச்சியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைப்பதில் தவெக எம்.எல்.ஏவிற்கும் காங்கிரஸ் கட்ச்டியை சேர்ந்த எம்.பிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திருச்சியை சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக்கை தனக்கு முன்னதாக குத்துவிளக்கேற்ற அழைத்ததற்கு திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர் விளக்கு அருகே செய்து பேசும்போது மெழுவர்த்தியும் கீழே விழுந்தது.

நடந்தது என்ன ? நவல்பட்டு விஜி விளக்கம்

இது தொடர்பாக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜயை தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவர் ‘கலெக்டர் அலுவலகம் தான் மாவட்ட அளவிலான இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது. அதில், ப்ரோட்டாகால் சரியாக பின்பற்றப்படவில்லை. அமைச்சர், ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றியபின்னர் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் என்னைதான் அடுத்து அழைத்திருக்க வேண்டும். மாறாக, காங்கிரஸ் எம்.பியுடம் குத்துவிளக்கு ஏற்ற மெழுவர்த்தி கொடுக்கப்பட்டது. அது பற்றிதான் நான் கேட்டேன். அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், சிலர் சமூக வலைதளங்களில் எனக்கும் காங்கிரஸ் எம்.பிக்கும் மோதல் என போட்டிருக்கிறார்கள். அது அப்பட்டமான தவறு. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபரை நான் அப்போதுதான் முதன்முதலாக பார்த்தேன். நிகழ்ச்சி முடிந்தது அவரிடம் பேசிவிட்டு தான் கிளம்பினேன். எனக்கும் அவருக்கும் எந்த தனிப்பட்ட பிரச்னைகளும் இல்லை. ஆட்சியர் அலுவலக தரப்பு சரியாக நிகழ்ச்சியை ஒருங்கிணைக்காததால் வந்த சின்ன சிக்கல்தான் இது. அதோடு, தவெக-விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதுப்படுத்துகிறார்கள்’ என்றார்.

சமூக வலைதளங்களில் வைரல்

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் திமுக தரப்பு, இது தான் தொடக்கம் என்றும் இன்னும் போக, போக காங்கிரஸ் – தவெக இடையே பல பிரச்னைகள் வெடிக்கும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Source: Read Full Article