ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனக்கென புதிய வரலாறு கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த அணியின் புகழுக்கு முக்கிய காரணமாக திகழ்பவர் எம்எஸ் தோனி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் சிஎஸ்கே அணிக்காக 5 முறை பட்டம் வென்று தந்தவர்.

தோனி விளையாடுவாரா?

46 வயதான தோனி தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீடித்து வருகிறார். இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் தொடரில் எம்எஸ் தோனி விளையாடுவாரா? அல்லது ஓய்வு பெறுவாரா? என்று ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2025ம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய தோனி, இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. ஆனால், தோனி ஆடுவாரா? இல்லையா? என்பது குறித்து அணி நிர்வாகம் முறையான அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடாமலே இருந்தது பெரும் ஆதங்கத்தை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியது.

டிசம்பருக்கு முன்பு அறிவிப்பு:

இந்த நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்பது குறித்து வரும் டிசம்பருக்கு முன்பு தோனி அறிவிக்க உள்ளார். இதற்காக அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ பரிசோதனையில் தோனி உடற்தகுதி பெற்றால் அவர் அடுத்த சீசனில் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அதேசமயம், சிஎஸ்கே நிர்வாகம் டிக்கெட் விற்பனைக்காக தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற விஷயத்தை ரகசியமாக வைத்தும், தோனியின் கடைசி சீசன், கடைசி சீசன் என்று டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விமர்சனங்களை முன்வைக்கும் ரசிகர்கள்:

இந்த முறையும் அதேபோன்று சம்பவங்கள் நிகழ்ந்தால் சிஎஸ்கே நிர்வாகம் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார்கள் என்று கருதப்படுகிறது. மற்றும் பெரும்பான்மையான ரசிகர்கள் தோனி போன்ற மாமேதை வீரர்களுக்கு முறையாக வழியனுப்பு விழா போட்டி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தோனியின் உடற்தகுதியைப் பொறுத்தே அவர் அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து உறுதி செய்யப்பட உள்ள நிலையில், வயது காரணமாக தோனி ஓய்வு பெற வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் தோனி 278 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 242 இன்னிங்சில் பேட் செய்து 5 ஆயிரத்து 439 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்துள்ளார். 264 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 24 அரைசதங்கள் விளாசியுள்ளார். இரு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தபோது புனே அணிக்காக தோனி ஆடினார்.

Source: Read Full Article