விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த 11-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய அன்று இரவு வீட்டில் உறங்கியபோது திடீரென மாயமானார். இதுதொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் குளம், ஏரி, கிணறு, பாறை இடுக்குகள் மற்றும் கரும்பு தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் துப்பு துலங்கவில்லை. 10 நாட்கள் ஆகியும் கிடைக்காததை அடுத்து விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை சிசிடிவி கேமராக்கள்

நேற்று ஆலம்பூண்டி பள்ளி வளாகத்தில் வைத்து தாய், தந்தை, பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் 6 மணி நேரம் பொதுவான விசாரணை நடந்தது. 6 ஆண்டுகளாக கொண்டாடாத பிறந்தநாளை இந்த ஆண்டு மட்டும் புதிய ஆடை, கேக், சாக்லேட் என சிறப்பாக கொண்டாடியது ஏன்? ஆடைகள், கேக் எந்த கடையில் யார் வாங்கினார்கள்? பிறந்தநாளில் யார் யார் வந்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

தாயிடம் 2வது நாளாக விசாரணை

14 நாட்களாகியும் சிறுமி குறித்து துப்பு கிடைக்காததால் நேற்று காலை ஆலம்பூண்டி கிராமத்தில் இருந்து சிறுமியின் தாய் பவானியை சிபிசிஐடி போலீசார் ஆட்டோவில் வைத்து செஞ்சி காவல் நிலையத்திற்கு வரவழைத்து தீவிர விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாக தாயிடம் மட்டும் தனியாக விசாரணை நடந்ததால், இந்த வழக்கில் விரைவில் முக்கிய துப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாயமான சிறுமி

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை. வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளை விடுதியில் அடைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது. சாத்தான்குளத்தில் இரு சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் அரிவாளால் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜய் மாமா எங்கே போனார்?

கோவையில் சாதிய வன்கொடுமையால் 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார் . மறுபுறம், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: Read Full Article