சமீபத்தில் 19 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தப்பட்டியலில் அதிகம் கவனிக்கப்பட்ட பெயர் மோனிகா ராணா ஐஏஎஸ். தென்காசி மாவட்டத்தின் 8-வது மற்றும் முதல் பெண் ஆட்சியராக மோனிகா ராணா பொறுப்பேற்றுள்ளார்.

யார் இந்த மோனிகா ராணா?

உத்தரகாண்ட் மாநிலத்தில் 1990-ஆம் ஆண்டு பிறந்த இவர், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். மருத்துவப்படிப்பை முடித்து குடிமை பணிகளை விரும்புபவர்கள் வெகுசிலரே, இந்நிலையில் அப்பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்று 2018-ஆம் ஆண்டில், தான் கல்வி பயின்ற தமிழ்நாடு கேடருக்கு தேர்வானார் மோனிகா ராணா.2018-இல் சேலம் மாவட்டத்தில் சார் ஆட்சியராக நியமிக்கப்பட்ட மோனிகா ராணா, பின்னர் நீலகிரியில் துணை ஆட்சியராகவும், மதுரையில் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் நியமிக்கப்பட்டார்.

திருநெல்வேலியில் மாநகராட்சி ஆணையர்

மாவட்ட அளவிலான பதவிகளில் நியமிக்கப்பட்டு வந்த மோனிகா ராணா ஐஏஎஸ், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டார். அங்கு ஆணையராக பணியாற்றிய காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் தூய்மைப் பணிகளில் கவனம் செலுத்தியதாகவும் கூற்ப்படுகிறது.

தென்காசியின் முதல் பெண் ஆட்சியர்

2019-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன், பின்னர் சமீரன், கோபால சுந்தரராஜ் என இதுவரை 7 ஆட்சியர்கள் பணியாற்றியுள்ள நிலையில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருவர் கூட அங்கு நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் மாவட்டத்தின் 8-வது ஆட்சியராகவும், முதல் பெண் ஆட்சியராகவும் மோனிகா ராணா நியமிக்கப்பட்டு பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article