கோடிக்கணக்கான இந்திய மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று LPG GAS CYLINDER . நம் நாட்டில் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் உள்ளிட்ட பொது துறை நிறுவனங்கள் தான் எல்பிஜி கேஸ் விநியோக சேவையையும் வழங்குகின்றன. ஆனால் கடந்த 7 மாதங்களாக இந்த நிறுவனங்கள் புதிதாக கேஸ் இணைப்புகளையே வழங்குவதில்லை. இதற்கு என்ன காரணம், புதிதாக கேஸ் இணைப்பு கிடைக்காதவர்களுக்கு வேறு வழி இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இந்தியா தனக்கு தேவையான எல்பிஜி கேஸை வளைகுடா நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறது. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் இந்தியாவுக்கு எல்பிஜி வரத்து குறைந்து போயுள்ளது. இந்தியா தனது எல்பிஜி தேவையில் 90 சதவீதத்தை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு வந்தது. ஆனால் 8 மாதங்களாக இந்த பாதை தடைபட்டுள்ளது. இதனால் இந்தியா வளைகுடா நாடுகளை விடுத்து அமெரிக்காவிலிருந்து அதிகமாக எல்பிஜி இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது.

எல்பிஜி சப்ளையில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த சமயத்தில் தான் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. குறிப்பாக கேஸ் புக்கிங் இடைவெளி அதிகரிக்கப்பட்டது, வணிக ரீதியான சிலிண்டர்கள் விநியோகம் முன்னுரிமை அடிப்படையில் மாற்றப்பட்டது. அப்போது தான் புதிதாக கேஸ் இணைப்புகளை தர தடை விதித்தது.

கடந்த ஜூன் மாதம் முதலே கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் இருந்த பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. ஆனாலும் புது கேஸ் இணைப்புக்கு தடை என்பது மட்டும் இன்னமும் மாறாமல் உள்ளது. புதிதாக திருமணமானவர்கள், புதிதாக தனி வீடு எடுத்தவர்கள், குடும்பத்தை விடுத்து தனியாக நகரங்களை நோக்கி வந்த தம்பதிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் புது கேஸ் இணைப்புகாக 6 , 7 மாதங்களாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ஜனவரி முதல் புதிய கேஸ் இணைப்பு வழங்கும் பணி மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புது கேஸ் சிலிண்டர் இணைப்பு கிடைக்கும் வரை நமக்கு வேறு ஏதேனும் வழிகளில் சிலிண்டர் கிடைக்குமா என்றால், எண்ணெய் நிறுவனங்கள் Free Trade LPG - FTL திட்டத்தின் கீழ் சிறிய ரக சிலிண்டர்களை விற்பனை செய்வதை குறிப்பிட்டு தற்காலிகமாக அதனை வாங்கி பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுமே 5 கிலோ மற்றும் 10 கிலோ எடை கொண்ட மினி சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. சோட்டூ, மினி, அப்பூ என்ற பெயர்களில் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் அனைத்து கேஸ் ஏஜென்சிகளிலும் கிடைக்கின்றன. பொதுமக்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொண்டு சென்றாலே போதும், இந்த குட்டி சிலிண்டர்களை வாங்கலாம். இதற்கு டெபாசிட், புக்கிங் போன்ற காத்திருப்புகள் இல்லை.

ஆனால் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரை முதலில் வாங்க நாம் 2000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பின் சிலிண்டர் நமக்கு சொந்தமானது, அதில் கேஸ் தீர்ந்துவிட்டால் மீண்டும் ஏஜென்சியில் வந்து ரீஃபில் செய்து கொள்ளலாம், அதற்கு சுமார் 700 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. நாம் கேஸ் தீரும் போதெல்லாம் ஏஜென்சி அல்லது அருகில் உள்ள கேஸ் ஸ்டேஷனுக்கு சென்று ரீஃபில் செய்து பயன்படுத்தலாம்.

இதே போல 10 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரை பெற 4000 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அதன் பின் கேஸ் தீர்ந்துவிட்டால் மீண்டும் ஏஜென்சியில் வந்து ரீஃபில் செய்து கொள்ளலாம், அதற்கு 1600 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இது கேஸ் விலை மாற்றத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் மாறும். ஆனாலும் இது குடும்பமாக வசிப்பவர்களுக்கு அதிக செலவினை தான் தரும். உதாரணமாக ஒரு குடும்பம் வழக்கமான சிலிண்டர் இணைப்பில் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் 30 நாட்கள் பயன்படுத்துகிறது என வைத்து கொள்வோம். அப்படி என்றால் சிலிண்டருக்கு அந்த குடும்பம் செய்யும் செலவு 971 ரூபாய் தான்.

இதுவே அவர்கள் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் என்றால் 3 முறையாவது ரீஃபில் செய்ய வேண்டும், முதலில் சிலிண்டர் வாங்க 2000 ரூபாய், அதன் பின் 3 முறை ரீஃபில் செய்ய ஒரு முறை 700 ரூபாய் என்றால் கூட 2100 ரூபாய் செலவாகும். எனவே இது நமக்கு கூடுதல் செலவு தான். மேலும் இதில் சிலிண்டரை எடுத்து சென்று ரீஃபில் செய்ய வேண்டும் ஆனால் வழக்கமான கேஸ் இணைப்பில் வீட்டில் இருந்து புக் செய்தாலே கேஸ் வந்துவிடும். குடும்பமாக வசிப்பவர்களுக்கு வழக்கமான கேஸ் சிலிண்டர் இணைப்பு தான் சரியாக இருக்கும், பேச்சிலர்களுக்கு அடிக்கடி ஊர் மாறுபவர்களுக்கு தான் சிறிய வகை சிலிண்டர்கள் பொருத்தமாக இருக்கும். இது தற்காலிகமான நடவடிக்கையாக இருந்தாலும் கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் பெரும்பாலும் மக்களுக்கு சிக்கல் இருந்துதான் வருகிறது. இதற்கு அரசுகள் சார்பில் விரைந்து நிரந்தர தீர்வு காண வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

Source: Read Full Article