LocalBody Election: உள்ளாட்சி நிர்வாகத்தை அடுத்த 6 மாதங்களுக்கு நிர்ணயிக்க அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அதிகாரிகள் நியமனம்:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, முதற்கட்டமாக 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 05.01.2025 அன்றே முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் பதவிக்காலம் கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அந்த பகுதிகளின் நிர்வாக பணிகளுக்கும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனி அலுவலர்கள் யார்?

20.10.2026 முதல் 19.04.2027 வரை பின்வருபவர்கள் தனி அலுவலர்களாக செயல்படுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

கிராம ஊராட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO - Village Panchayat)

ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) / ஊராட்சி ஒன்றிய தணிக்கை உதவி இயக்குநர்

மாவட்ட ஊராட்சிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர்

ஆகியோர் தனி அலுவலர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புதிதாக உருவாக்கப்பட்ட 93 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தனி அலுவலர்களின் பதவி நீட்டிப்பு தொடர்பாக அவசரச் சட்டம் (Ordinance) பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தாதற்கான காரணங்கள் என்ன?

46 கிராம ஊராட்சிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன

புதிதாக 93 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன

இதனால் ஊராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு (Delimitation) செய்ய வேண்டும் மற்றும் இடஒதுக்கீடு மாற்ற வேண்டும்

இது தொடர்பான வழக்கு (W.P. No.30639/2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

இந்த பணிகளை முடிக்காமல் தேர்தல் நடத்த முடியாது என்பதால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 261-A-ன் கீழ் தனி அலுவலர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Weather Update: வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! மழை தீவிரமடையும் என IMD வார்னிங்

தொடர்ந்து தாமதமாகும் உள்ளாட்சி தேர்தல்:

28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த திமுக ஆட்சியிலும் தேர்தல் நடத்த எந்த முனைப்பும் காட்டப்படவில்லை. சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கும் நேரத்தில் உள்ளாட்சி தேர்தலில் சறுக்கினால், அது பொதுத்தேர்தலிலும் பிரதிபலிக்கும் என கருதி காலம் தாழ்த்தப்பட்டடதாக அப்போது அரசியல் வல்லுநர்கள் குறிப்பிட்டனர். தற்போது ஆட்சியில் உள்ள தவெக, கட்சி கட்டமைப்பில் தற்போது வரையிலும் முழுமையாக வலுப்பெறாததால், உள்ளாட்சி தேர்தலை சந்தித்து பலவீனத்தை வெளிப்படுத்த வேண்டாம் என விரும்புகிறதாம். அதனால் தற்போதைக்கு தேர்தல் வேண்டாம் என கருதுகிறதாம். நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலமும் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ளதால், அதன்பிறகு ஒட்டுமொத்தமாக சேர்த்தே தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளதாம். இதனால் தற்போதைக்கு அதிகாரிகளை கொண்டே உள்ளாட்சி அமைப்புகளை கட்டுப்படுத்தி வழிநடத்த அரசு முடிவெடுத்துள்ளது.

Source: Read Full Article