BJP L.Murugan: பிரதமர் மோடி சென்னை வந்து சென்ற மூன்று நாட்களிலேயே மத்திய இணையமைச்சர் பொறுப்பிலிருந்து எல். முருகன் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகன் பதவி விலகல்..!

மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கான ஒரே பிரதிநிதியாக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் இருந்து வந்தார். ஆனால், கடந்த வாரம் பிரதமர் மோடி சென்னை வந்து சென்ற பிறகு, மூன்று நாட்கள் இடைவெளியிலேயே எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கூடுதலாக தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடவே, பதவியை ராஜினாமா செய்வதாக அவர் விளக்கமளித்தார். ஆனால், திரைமறைவில் இதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான பல அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பரிசாக வந்த அமைச்சர் பதவிக்கு ஆப்பு..!

கடந்த 2021ம் ஆண்டு எல். முருகன் தலைமையில் மாநில பாஜக சட்டமன்ற தேர்தலில் களம் கண்டது. அவர் தோல்வியுற்றாலும், முதல்முறையாக அக்கட்சிக்கு தமிழ்நாட்டில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர். இதற்கு பரிசாக எல்.முருகன் மத்திய இணையமைச்சர் ஆக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவில் அருந்ததியர் சமூகத்தில் இருந்து மத்திய அமைச்சரான முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஐந்து ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தவர், ஒரே இரவில் டெல்லி அதிகாரமட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார். அமைச்சராக அவர் போதிய அளவில் திறம்பட செயல்பவில்லை என்பதே இதற்கான முதல் காரணமாக கூறப்படுகிறது.

ஆக்‌ஷனில் கோட்டைவிட்ட எல். முருகன்..!

அமைச்சர்களின் செயல்பாடுகளை சீரானை இடைவெளியில் ஆய்வு செய்வது பிரதமர் அலுவலகத்தின் வழக்கமாக உள்ளது. அவர்களது சமூக வலைதள செயல்பாடுகள் மூலமும் களப்பணிகளில் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டுகின்றனர் என்பது கவனிக்கப்படுமாம். அப்படி நடந்த ஆய்வில் எல். முருகனின் செயல்பாடுகள் பெரிய அளவில் திருப்தி ஏற்படவில்லையாம். கடந்த ஜனவரி மாதமே பொறுப்பில் இருந்து தூக்கிவிடலாம் என கருதிய நிலையில், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அப்போதைக்கு அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி

”தமிழகத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை”

இதுபோக தமிழ்நாட்டிற்கு எல். முருகன் வாயிலாக கடந்த 5 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்தபோது, வெறும் ஒரே பக்கத்திற்குள்ளாகவே அவை அடங்கிவிட்டனவாம். இப்படி இருந்தால் தமிழ்நாட்டில் எப்படி கட்சி வளரும் என டெல்லி கொதிப்படைந்துள்ளது. அதோடு, சட்டமன்ற தேர்தலின்போது வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டு பெறாததற்கும், எல். முருகன் தான் காரணம் என மாநில தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலிடம் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டுக்கொடுத்துள்ளார்.

உதவியாளரால் தீவிரமான பிரச்னை

இதனிடையே, டெல்லியில் அவரது உதவியாளராக இருந்த கவியரசனுக்கு சொந்தமான இடத்தில், கடந்த ஜனவரியில் மத்திய உளவுப்பிரிவினர் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. உடனே அவரை வேலையை விட்டு நிறுத்தியதோடு, வெளிநாட்ட்டிற்கு செல்லவும் எல். முருகன் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அவர் உள்ளூரிலேயே வலம் வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, அவரை வரவேற்போருக்கான பட்டியலில் தனது சொந்த சிபாரிசு அடிப்படையில் கவியரசனை சேர்த்துள்ளது. இந்த விவரத்தை அறிந்ததும் பாஜக தலைமை கொதிப்படைந்துள்ளது. இதனால் தான் உடனடியாக அவர் பதவி பறிக்கப்பட்டதாகவும், ஆனால் மரியாதை நிமித்தமாக ராஜினாமா என அறிவிக்கும்படி டெல்லி வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பேக் இருக்குமா?

ராஜினாமா கடிதத்தில் கட்சியை வலுப்படுத்தப்போவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதனால், பல்வேறு களேபரங்களுக்குப் பிறகும், கட்சிக்குள் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை கொண்டுள்ளாராம். ஆனால், அவரை மட்டுமே தனி ஆளாக அமைச்சரவை பட்டியலில் இருந்து நீக்கியிருப்பதால், எல்.முருகனுக்கு இனி கம்பேக் இருக்கும்? என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என பாஜக வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன.

Source: Read Full Article