ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்ல இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

IND VS PAK : இறுதி யுத்தம்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. பொதுவாகவே உலகக் கோப்பை லீக் ஆட்டங்களிலேயே இந்த இரு அணிகள் மோதும் போட்டி பெரிதளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், ஆசிய விளையாட்டு தொடரின் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்திற்காக இவ்விரு அணிகள் தற்போது மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது.

டாஸ் வென்ற இந்தியா

ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் காலை 10.30 மணியளவில் போட்டி தொடங்கிய நிலையில், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முன்னதாக, டாஸ் நிகழ்வின் போது இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் இருவரும் கைகுலுக்கிக் கொள்வதைத் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மாஸ்டர் பிளேன்

கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதான ஆடுகளம் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, முதலில் பேட்டிங் செய்து நல்ல ரன்களை குவித்து பின்னர், சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து பாகிஸ்தானை திக்குமுக்காட வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அபிஷேக் சர்மா அபாரம்

இந்தியா தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக களமிறங்கிய அபிஷேக் சர்மா வழக்கம் போல் தனது பாணியில் அதிரடி காட்டினார். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட வெறும் 28 பந்துகளில் 61 ரன்களை குவித்து அராஃபத் மின்னாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதிப் போட்டியில் இமாலய இலக்கு

மற்றொரு அதிரடி தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 ரன்களில் ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் (21) மற்றும் இஷான் கிஷன் (20) ரன்களில் விக்கெட்களை பறிகுடுத்தனர். இந்த நிலையில், திலக் வர்மா - ஷிவம் துபே ஜோடி நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை நல்ல இலக்கை நோக்கி முன்னேற செய்தது. ஷிவம் துபே 27 ரன்களில் ஆட்டமிழக்க, திலக் வர்மா அரை சதத்தை பூர்த்தி செய்து கடைசி வரை நிலைத்து நின்று ஆடினார். இதன்மூலம், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 211 ரன்களை குவித்தது.

வெல்லப்போவது யார்?

ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவர் கிரிக்கெட் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 212 என்ற கடினமாக இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக உள்ள நிலையில், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னாய் சுழற் கூட்டணியை பாகிஸ்தான் சமாளித்து இலக்கை அடையுமா அல்லது பாகிஸ்தான் மீதான தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை இந்திய அணி நிரூபித்து காட்டுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Source: Read Full Article