GEM Veeramani Arun IPS: ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள, கண்ணனிடமும் நேற்று விசாரணை நடந்துள்ளது.

அருண் ஐபிஎஸ்-யிடம் விசாரணை:

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்பான பாலியல் வழக்கை மூடி மறைக்க பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அருணிடம், வீரமணி சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கைக் கையாண்ட விதம் குறித்து விசாரிக்கும் காவல் குழுவினர் நேற்று சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாக்க முயன்றதோடு, அதற்காக பணம் பெற்றதாக எழுந்த புகாரின் ஒரு பகுதியாக சுமார் 80 கேள்விகள் கேட்கப்பட்டதோடு, அதற்கான அருணின் பதில்கள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தவெக ஆட்சி அமைந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு, அடுத்த சில வாரங்களிலேயே காவல்துறை பயிற்சி அகாடமி இயக்குனராக அருண் மாற்றப்பட்டார். அதன் தொடர்ச்சியாக தற்போது கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, விசாரணைக்கும் உள்ளாக்கப்படுவது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஜி கண்ணனிடமும் விசாரணை:

முன்னதாக தற்போது கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் என். கண்ணனிடமும், வீரமணி சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கைக் கையாண்ட விதம் குறித்து விசாரித்து வரும் காவல்துறை குழு விசாரணை நடத்தியது. கடந்த சனிக்கிழமை அன்று நடந்த விசாரணையில் பணப் பரிவர்த்தனை குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு அதற்கான அவரது பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் நகர காவல்துறை ஆணையர் பதவியேற்கும் முன்பு, வீரமணி தொடர்பான புகாரை 2024ம் ஆண்டு சென்னை கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் தான் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையிலேயே தற்போது அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு..!

தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குவிந்து வரும் புகார்கள், தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்றுவரை அவர் மீது 7 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அவர் மட்டுமின்றி அவருக்கு உதவியாக இருந்த மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, 20 வருடங்களாக நடைபெற்று வருவதாக கூறப்படும் இந்த குற்றச் செயல்கள் தொடர்பாக, இரண்டு வருடங்களுக்கு முன்பே வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதோடு வழக்கை மூடி மறைக்க பல கோடிகளில் பணம் கைமாறியுள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்: CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ

அமலாக்கத்துறை விசாரிக்கக் கோரிக்கை

இதனிடையே சமூக நல ஆர்வலரான வாராஹி இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை மற்றும் பிற மத்திய அமைப்புகள் நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பாதுகாப்பு அளிக்கவும், வழக்கை முடித்து வைக்கவும் சட்டவிரோத லஞ்சமாக ரூ.40 கோடி வழங்கப்பட்டதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து ஒரு தனி காவல் குழு விசாரித்து வருகிறது.

Source: Read Full Article