காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்காசி, போத்தனூர், எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அரசு விடுமுறை என்ற நிலையில் நடப்பாண்டு அக்டோபர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அதனுடன் சேர்த்து வார இறுதி நாட்களும் வருவதால் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கு தற்போது காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கும் பயணப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வெளியூரில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க திட்டமிட்டு வருகின்றனர். வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

சென்னை டூ தென்காசி

இந்த நிலையில் வண்டி எண் 06123 சென்னை தாம்பரத்தில் இருந்து தென்காசி வரை இயக்கப்படுகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதியான இன்று இரவு 11:55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாளை நண்பகல் 12.15 மணிக்கு தென்காசி சென்றடையும். மறு மார்க்கமாக அக்டோபர் 4ம் தேதி 06124 என்ற எண்ணை கொண்ட ரயிலானது செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு வருகிறது. செங்கோட்டையில் மாலை 5.40 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வருகிறது.

இந்த சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல் டூ போத்தனூர்

அதேபோல் அக்டோபர் 1ம் தேதியான இன்று இரவு 11:55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அக்டோபர் 2ம் தேதி காலை 9.15 மணிக்கு போத்தனூர் செல்லும். இந்த ரயிலானது பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறு மார்க்கமாக அக்டோபர் 4ம் தேதி மாலை 6:15 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு அக்டோபர் 5ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் டூ மானாமதுரை

இதனைத் தவிர தாம்பரத்திலிருந்து மானாமதுரை வரை முன்பதிவு இல்லா பெட்டிகளைக் கொண்ட மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று மாலை 4:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.20 மணிக்கு மானாமதுரை சென்றடைய மறுமார்க்கமாக அக்டோபர் 4ம் தேதி மதியம் 2.45 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயில் அன்று இரவு 11:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலானது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதே போல் அக்டோபர் 4ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக அக்டோபர் 5ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Source: Read Full Article